கூட்டமைப்பின் பெரும்பாலானோர் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில்
.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்தேன். சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரை தவிர கூட்டமைப்பின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளார்கள். அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் உரையை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கேட்டேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதை வார்த்தையால் சொல்லாவிடினும், அவரது மனதில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாடு இருப்பதை அவதானிக்க முடிகிறது என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம். எனது உரையை செவிமெடுத்தவர்களுக்கு அதன் அர்த்தம் விளங்கும் நீங்கள் மாறுப்பட்ட பொருட்கோடல் வழங்க வேண்டாம் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய மதுர விதானகே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை புதன்கிழமை (4) காலை சந்தித்தேன். பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரை தவிர ஏனையோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளார்கள். அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை.
பலமான அரச தலைவரை தெரிவு செய்வதை தடுப்பதற்கு சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அதற்காக பெருமளவிலான நிதி செலவழிக்கப்படுகிறது. ஆகவே மக்கள் அறிவு பூர்வமாக சிந்தித்து ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.