பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்!
.
மாநில அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்!
தங்கள் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு செவிசாய்க்காத காரணத்தால், கொல்கத்தாவில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 5) மாலை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.முன்னதாக, ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நீண்ட நாட்களாக போராட்டம் நடந்துவரும் நிலையில், வெள்ளியன்று, கொல்கத்தாவின் தர்மதாலாவில் உள்ள டோரினா கிராசிங்கில் உள்ள மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.மேலும், தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மேற்குவங்க அரசுக்கு 24மணிநேர கெடு வைத்தனர்.
மாநில அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
ஜூனியர் மருத்துவர்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், "மேற்குவங்க மாநில அரசு காலக்கெடுவைத் தவறிவிட்டது. எனவே நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறோம்." என போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.அவர்கள் மேலும், "இந்த உண்ணாவிரத போராட்டம் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும். போராட்டத்தின் வெளிப்படைத்தன்மையைக் காக்க, எங்கள் சகாக்கள் உண்ணாவிரதம் இருக்கும் மேடையில் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளோம்." என்று தெரிவித்தனர்.தங்களில் ஆறு பேர் மேடையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், மற்றவர்கள் பணிக்கு திரும்புவதாகவும், ஆனால், அவர்களும் எதையும் உண்ணமாட்டார்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேலும், தங்களுக்கு ஏதும் நேர்ந்தால், அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசே பொறுப்பு என அவர்கள் கூறியுள்ளதால், மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.