இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளின் கதி என்ன?
தமிழ் தாய்மார்கள் ஒன்றரை தசாப்தங்களாக நடத்தும் போராட்டத்தைப் பொருட்படுத்தாத சில தமிழ் அரசியல்வாதிகள்! வடக்கில்இ தற்போதைய ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதியுடன் மேடையேற கூடாது; யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் எதிர்ப்பு.
போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் கஞ்சி விநியோகத்திற்கு எதிராக பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டமைக்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் 2009ஆம் ஆண்டு தொடக்கம் வீதியில் திரியும் தெரு நாய்களைப் போல் தமது உறவுகள் எங்கே எனக் கேட்டு அலைந்துகொண்டிருக்கின்றார்கள்.
எனவே இந்த நாட்டிலே கொலைகளை செய்தவர்களுக்கு அவர்களுக்கு துணை போகின்றவர்களாகவும் இன்றைய அபிவிருத்தி திட்டத்திற்கு அவர்கள் கைகொடுத்திருக்கின்றார்கள். எனவே இந்த ஜனாதிபதி அடுத்த தேர்தலுக்காக தனது கபட நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றார்.
மக்கள் ஆணையில்லாமல் பதவிக்கு வந்த ஜனாதிபதி மக்கள் ஆணையை பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றார். அதற்கு எமது அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் துணை போகின்றார்கள்.”
வடக்கிற்கு மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி வவுனியா மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது, செயலகத்திற்கு முன்பாக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தாய்மார்கள் குழுவினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடமாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் வகையில், மே 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வருகைக்கு முன்னர், யுத்தத்தின் இறுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கத் தவறிய இலங்கைத் தலைவருடன் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தயக்கம் வெளியிட்டிருந்தனர்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா, அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் அரசியல்வாதிகளை ‘அரசாங்கம் வீசும் எலும்புத் துண்டுகளை எடுப்பவர்கள்’ என விமர்சித்திருந்தார்.
“அவர்கள் சுகபோகமாக வாழ்வதற்கு இந்த தமிழ் மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள் தெரியாமல், அடக்குமுறைகளை பார்த்துக்கொண்டு ஜனாதிபதியுடன் கைகோர்க்கின்றனர். வீதியிலே ஜனநாயக ரீதியில் போராட முடியாமல், எமது நீதியை கேட்க முடியாமல் அடக்கி, ஒடுக்கி சிறைக்குள் அடைக்கப்படுகின்றோம். அதனை தட்டிக் கேட்காத அரசியல்வாதிகள்தான் தமிழர்களாக இருக்கின்றார்கள்.”
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைவராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் செயலாளராக செயற்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக மாத்திரமே அரச தலைவர் செயற்படுகிறார் என சுட்டிக்காட்டுவதோடு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடக்குமுறைக்கு அஞ்சி தமிழ் மக்கள் தமது உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்பதைத் தெரிவிக்கும் ஒரே வழி ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியிருந்தது.
ஒரு நாடு – இரண்டு சட்டங்கள்
போரின் இறுதி நாட்களில் எறிகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட, நோய்களுக்கு மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் துயரங்களை அனுபவித்த, தமிழ் மக்களின் பட்டினிச் சாவை தடுக்க உதவிய ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ என்ற வரலாற்றுக் கஞ்சி விநியோகத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம், வெசாக் தானம் வழங்கும் நிகழ்வுகளின்போது நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சிவானந்தன் ஜெனிற்றா கேள்வியெழுப்பியுள்ளார்.
“முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சியபோது அடக்குமுறைக்குள் உட்பட்டு சுகாதார சீர்கேடு எனக் கூறி அந்த கஞ்சியை தடுத்து, காலால் தள்ளி அவர்களை கைது செய்தார்கள். வெசாக் விடுமுறைக்கு இந்த பொலிஸ் நிலையங்களிலே, வீதியோரங்களிலே, வீதிகளிலே சாப்பாடுகள், ஐஸ்கிறீம்கள் எத்தனை கொண்டாட்டங்களை கொண்டாடுகின்றபோது அவர்களுக்கு விதிமுறைகளோ, சுகாதார நடைமுறைகளோ இல்லை. ஆகவே, இங்கு பார்க்கின்றபோது சிங்களவர்ளுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம்.”
யுத்தத்தில் தமிழ் தாய்மார்களால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட உறவினர்களின் கதி என்னவென்று தெரியாது எனக் கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின்பற்றுவதற்கு ‘வெட்கம் இல்லையா’ என வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் சிவானந்தன் ஜெனிற்றா கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்த அரசியல்வாதிகளையும், அமைச்சர்களையும் கேட்கின்றேன். உங்களுக்கு சூடு, சொரணை வெட்கம் இல்லையா? இல்லை தமிழர்களுக்கு நீங்கள் நீதியா கேட்கப்போகின்றீர்கள்? இன்று நீதி கேட்கின்றவர்களாக இருந்தால் தெருவில் தெரியும் மக்களை கொஞ்சம் யோசியுங்கள். அவர்களின் கையில் ஒப்படைத்த உறவுகளை இல்லையெனக் கூறிய ஜனாதிபதி, ஒரு பொங்கலுக்கு வந்து இல்லையெனக் கூறிய ஜனாதிபதியிடம் நீங்கள் அபிவிருத்தி கேட்கப்போகின்றீர்கள்.
மே 24, 25 மற்றும் 26
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மே 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிட திறப்பு விழா, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாண மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் “உறுமய” நிகழ்வு மற்றும் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்வான யாழ்ப்பாணம் மாவட்ட ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலைய திறப்பு விழா, இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் இடம்பெற்ற “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஆகியவற்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார்.
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனிடம் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 25ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றார்.
புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 700 முழு உரிமையுள்ள காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு, நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 3,329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு திறப்பு விழா ஆகிய நிகழ்வுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், எஸ்.நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை முன்னாள் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.