பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை -
தந்தை டி.எஸ்.ராகவேந்திரா, தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தாயாரும் ஒரு பின்னணி பாடகி ஆவார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகேவந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவமனையில் கல்பனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள கல்பனா, கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்ட காவலாளி, நேற்று (மார்ச்.04) இது குறித்து குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் கல்பனாவின் தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்புவாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் கல்பனாவின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு கல்பனா சுய நினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கல்பனா அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. அதனால் தான் அவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இப்போது அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
கல்பனாவின் உடல்நிலை குறிது அறிந்துக்கொள்ள பாடகர்களான சுனிதா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஆனால் ஊடகங்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூறவில்லை. கல்பனா ஏன் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார்?, எப்போது சாப்பிட்டார். கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
பின்னணி பாடகி கல்பனா இசை குடும்ப பின்னணியை சேர்ந்தவர். அவரது தந்தை டி.எஸ்.ராகவேந்திரா, தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பிரபலம் ஆனவர். அதே போல் டி.எஸ்.ராகவேந்திராவின் மனைவியும், கல்பனாவின் தாயாருமான சுலோச்சனாவும் ஒரு பின்னணி பாடகி ஆவார். சிறு வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் பழகிய கல்பனா, நாளடைவில் முக்கியமான பின்னணி பாடகியானார்.‘பிரியமான தோழி’ படத்தில் இடம்பெற்ற ‘பெண்ணே நீயும் பெண்ணா’, ’மாயாவி’ திரைப்படத்தில் ’கடவுள் தந்த அழகிய வாழ்க்கை’, ரஜினி முருகன் திரைப்படத்தில் ’ஜிகுரு ஜிகுரு’ என புகழ்பெற்ற பல பாடல்களை பாடியுள்ளார் கல்பனா. தற்போது வெளிவந்த ’மாமன்னன்’ திரைப்படத்தில் ’கொடி பறக்குது காலம்’ பாடலும் இவர் பாடியுள்ளார். மேலும் இதுவரை 3000 மேற்பட்ட இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ள பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு தொலைக்காட்ட்சிகளில் பாடல் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்குபெற்று வருகிறார் கல்பனா.