செம்மணி மனிதப் புதைகுழி; அகழ்வாய்வின் மூன்றாவது நாளில் மனித எலும்புகள் வெளிப்பட்டன!
ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வாய்வு ஆரம்பமாகி மூன்று நாட்களுக்குப் பின்னர், மனிதப் புதைகுழியில் மேலும் மனித எலும்புகள்!
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வாய்வு ஆரம்பமாகி மூன்று நாட்களுக்குப் பின்னர், மனிதப் புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில் இன்றைய தினம் (ஏப்ரல் 29) மனித எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
"ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட 211 மற்றும் 220 எலும்புக்கூடுகளின் ஆகியவற்றின் பகுதியளவிலான எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வடமேற்கு பகுதியில் அகழ்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில எலும்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது." மனிதப் புதைகுழியில் நடைபெறும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாகின. 45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் உள்ளடங்குகின்றன. மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கு யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரின் அனுமதி கிடைத்துள்ளதாக, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 2026 ஏப்ரல் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கு மேலதிகமாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ருமேனியா தூதரக அதிகாரிகளும் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட அனுமதி கோரியிருந்தன.


