Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

சுவர்களைக் கடந்து செல்பவன் (Le Passe-Muraille)

வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிற்பம் 1989-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக அந்தச் சுவரில் நிறுவப்பட்டது.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸ் மாநகரில், கலைகளுக்கும் வரலாற்றுக்கும் புகழ்பெற்ற மொன்ன்மார்ட் (Montmartre) பகுதியில் அமைந்துள்ள ஒரு விசித்திரமான மற்றும் சுவாரசியமான சிற்பம்தான் Le Passe-Muraille சுவர்களைக் கடந்து செல்பவன்.  பாரிஸ் (Paris) நகரின் புகழ்மிக்க மொன்ன்மார்ட்குன்றின் மீது அமைந்துள்ள 'மார்செல்-எமே சதுக்கம்' (Place Marcel-Aymé) என்ற இடத்தில் இந்தச் சிலை அமைந்துள்ளது. கல்லால் ஆன ஒரு சுவரில் இருந்து ஒரு மனிதன் பாதி வெளியே வருவது போலவும், அவனது உடலின் மீதிப் பகுதி சுவருக்குள்ளேயே சிக்கிக் கொண்டது போலவும் இது மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கற்பனைக் கதை உள்ளது. பிரெஞ்சு இலக்கிய உலகின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான மார்செல் எமே (Marcel Aymé), 1943-ஆம் ஆண்டு ஒரு சிறுகதையை எழுதினார். அந்தச் சிறுகதையின் பெயர்தான் "லு பாஸ்-முயூரல்" (தமிழில்: சுவர்களைக் கடந்து செல்பவன்). இந்தக் கதையின் நாயகன் பெயர் டியூடிலுல் (Dutilleul). அவன் ஒரு சாதாரண அரசு அலுவலகப் பணியாளர். அவனுக்குத் திடீரென்று ஒரு மாய சக்தி கிடைக்கிறது; அதாவது, எந்த ஒரு கடினமான சுவரையும் தடையின்றி ஊடுருவிச் செல்லும் விசித்திரமான சக்தி அது. தொடக்கத்தில் இந்தச் சக்தியைப் பயன்படுத்தத் தயங்கிய அவன், பின்னர் அதை வைத்துப் பல குறும்புகளைச் செய்கிறான். வங்கிகளில் திருடுகிறான், தன்னைச் சிறையில் அடைத்தாலும் சுவரைக் கடந்து தப்பிக்கிறான், மேலும் ஒரு பெண்ணைக் காதலிக்கவும் செய்கிறான்.

ஆனால் கதையின் முடிவில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படுகிறது. ஒரு நாள் இரவு, அவன் தனது காதலியைச் சந்தித்துவிட்டு ஒரு சுவரைக் கடந்து செல்ல முயலும்போது, எதிர்பாராதவிதமாக அவனது மாய சக்தி திடீரென அவனிடமிருந்து விடைபெறுகிறது. இதனால் அவனால் அந்தச் சுவரை முழுமையாகக் கடக்க முடியாமல், பாதியிலேயே அந்தச் சுவருக்குள்ளேயே நிரந்தரமாகச் சிக்கிக் கொள்கிறான்.

மனித ஆசைகளின் எல்லைகளையும், சில நேரங்களில் நாம் பெறும் அளவற்ற சக்தியோ அல்லது வரமோ நமக்கு எப்படிச் சாபமாக மாறக்கூடும் என்பதையும் இந்தக் கதை ஆழமாக உணர்த்துகிறது. அந்தச் சுவரில் நிரந்தரமாகச் சிக்கிக்கொண்ட கதையின் நாயகனான டியூடிலுல், சுவரில் இருந்து வெளியே வரத் தவிக்கும் அந்த இறுதித் தருணத்தையே இந்தச் சிலை நமக்கு உணர்த்துகிறது.

வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிற்பம் 1989-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக அந்தச் சுவரில் நிறுவப்பட்டது. இந்தச் சிறுகதையை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மார்செல் எமே, இந்த மொன்மார்ட்ர் பகுதியில்தான் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். அவருடைய சிறந்த இலக்கியப் படைப்புகளையும், அவரது அபாரமான கற்பனைத் திறனையும் போற்றும் வகையிலும், அவருக்கு ஒரு நிரந்தரமான அஞ்சலி செலுத்தும் நோக்கிலும்தான் இந்தச் சிலை அவர் வாழ்ந்த பகுதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டது. 

இந்தச் சிலையை வடித்தவர் புகழ்பெற்ற பிரெஞ்சு நடிகரும் சிற்பியுமான ஜோன் மாரே (Jean Marais). எழுத்தாளர் மார்செல் எமேயின் மீதிருந்த அளவுகடந்த மரியாதையின் காரணமாகவே, அவர் இந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தை வெண்கலச் சிலையாக வடித்து உயிரூட்டினார். இன்றும் உலகெங்கிலும் இருந்து  இந்தப் பகுதிக்குச் செல்லும்  பயணிகள், அந்தச் சிலையின் கையைப் பிடித்துப் பார்ப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனாலேயே அந்தச் சிலையின் ஒரு கை மட்டும் பலருடைய தொடுதலால் பளபளப்பாக மாறியிருப்பதைக் காண முடியும். ஒரு சிறந்த கற்பனைக் கதை எப்படி வரலாற்றில் ஒரு அழியாத கலையாக மாற முடியும் என்பதற்கு இந்த லு பாஸ்-முராய் (Le Passe-Muraille) சிலை ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.  

- சிவா சின்னப்பொடி