வட்ட மேசை மாநாடு: இலங்கை - இந்திய பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல்.
பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல்.

இந்திய உயர் ஸ்தானிகரகம் 'ஐ.என்.ஆர். - எல்.கே.ஆர். (INR - LKR) வர்த்தக தீர்வு : இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் கொழும்பில் ஒரு வட்ட மேசை மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள், இலங்கை மற்றும் இந்திய வங்கிகளின் பிரதிநிதிகள், பல்வேறு வர்த்தக சபைகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர் குழுக்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்நிகழ்வை வழிநடத்தினர். இந்திய உயர் ஸ்தானிகரின் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.
அதைத் தொடர்ந்து இந்திய சேமிப்பு வங்கியின் தலைமைப் பொது முகாமையாளர் ஆதித்யா கைஹாவின் விரிவான விளக்கவுரை வழங்கப்பட்டது,
இந்திய ரூபாவை சர்வதேசமயமாக்கல் மற்றும் இலங்கை - இந்திய வர்த்தக தீர்வு குறித்தும், இலங்கையில் இந்திய ரூபாவில் முதலீடுகளை அனுமதிக்கும் இந்திய சேமிப்பு வங்கியின் முக்கிய கொள்கைகளையும் அவர் இதன் போது எடுத்துரைத்தார்.
எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் இந்திய - இலங்கை நாணய பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் இந்திய சேமிப்பு வங்கியின் சமீபத்திய திருத்தங்கள் குறித்து அவர் மேலும் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இந்திய ரூபாய் மதிப்பிலான வர்த்தக தீர்வு கட்டமைப்பைப் பற்றிய நுண்ணறிவுகள் தொடர்பில் விளக்கமளித்தார். இந்த பொறிமுறையின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் இந்த பொறிமுறையை நெறிப்படுத்துவதில் இரு நாடுகளிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மத்திய வங்கிகளுடன் இணைந்து செயற்படுவதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, உயர்மட்டத் தலைமைகளால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட உறுதிப்பாட்டுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்துவதற்காக இந்திய - இலங்கை ரூபாய் மதிப்புள்ள வர்த்தக தீர்வுகளை மேம்படுத்துவது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.