சென்னையில் காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை... இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது!, பலத்த மழையால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரமாக சென்னை முழுவதும் வெயில் கொளுத்தி வந்தது. கோடை வெயிலுக்கு நிகராக வெப்பம் வாட்டி வதைத்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது.
குறிப்பாக எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், அடையார், வேளச்சேரி, திருவான்மியூர், வளசரவாக்கம், வடபழனி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
பலத்த மழையால் எழும்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பெரம்பூர், ராயபுரம், வியாசர்பாடி, உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கிண்டி, பல்லாவரம், சாலிகிராமம், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோபாலபுரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.