“பொறுத்திருந்து பாருங்கள்“: 7ஆம் திகதி என்ன நடக்கிறதென
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகளை அக்கட்சியினர் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் இன்னமும் வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி உறுதியாக முடிவுசெய்யவில்லையென தெரியவருகிறது.
கடந்தவாரம் கூடிய அக்கட்சியின் அரசியல் உயர்பீடம் ஜனாதிபதித் தேர்தலில் தனித்து வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இனியும் ஆதரவளிக்காதென தெரிவித்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி தமது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நேற்று ஊடகங்களுக்கு அறிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
எமது கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் நாம் ஒரு வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானித்துள்ளோம். அவர் யார் என்பதை எதிர்வரும் 7ஆம் திகதி நாட்டு மக்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அவர் ஒரு வெற்றி வேட்பாளராக இருப்பார்.” என்றார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்த அக்கட்சி ஆலோசனைகளை நடத்தி வருவதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தம்மிக்க பெரேராவும் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக பலமுறை கூறிவிட்டார்.
ஆனால், இன்னமும் பொதுஜன பெரமுன இறுதி தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும் கட்சியின் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள கூடிய மற்றுமொரு வேட்பாளர் குறித்தும் ஆலோசனைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.