ஜனாதிபதி, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்திகள்
.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
அஞ்ஞானத்தின் இருளைப் போக்க மெய்ஞ்ஞான ஔியால் மட்டுமே முடியும் என்ற ரீதியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கேட்டுகொண்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருமாறும் ஜனாதிபதி கேட்டுக்கணெ்டுள்ளார்.
இந்த தீபாவளி பண்டிகையில் வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை மலரச்செய்யும் மாற்றத்திற்கான யுகத்தை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி நாளில் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல் நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை தம் இதயங்களில் ஒளிரச்செய்ய வேண்டுமென பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப அனைவரும் மீள சிந்திக்க வேண்டிய தருனம் இதுவாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'வளமான தேசம் - அழகான வாழ்க்கை' என்ற தமது அரசியல் கொள்கையின் மூலம் அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும் மகிழ்ச்சியையும் புதுப்பித்தலையும் தரக்கூடியதாக அமையுமென்பதுடன், அனைவருக்கும் மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள, அமைதியான தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.