அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு பைடன் அனுமதி – போரின் போக்கு மாறுமா?
.
படக்குறிப்பு, ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ (186 மைல்கள்) வரை செல்லக்கூடும்
கட்டுரை தகவல்
எழுதியவர், பால் ஆடம்ஸ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
பதவி, பிபிசி நியூஸ்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரேன் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.
ரஷ்யா – யுக்ரேன் போரில் அமெரிக்கா கடைபிடித்து வந்த கொள்கையின் முக்கிய மாற்றமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதை அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி முகமையிடம் உறுதி செய்துள்ளார்.
யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் யுக்ரேன், தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலும் அதனை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான இந்த செய்திகளுக்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, “ஏவுகணைகளின் மொழி என்பது வேறு. இது குறித்த விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை” என்று கூறினார்.
‘நேட்டோ கூட்டணியின் நேரடி பங்கேற்பு’
இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார். கட்டுப்பாடுகளை நீக்குவது, யுக்ரேன் போரில் நேட்டோ ராணுவ கூட்டணியின் ‘நேரடி பங்கேற்பை’ பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கைகள் குறித்து புதின் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் மற்ற மூத்த ரஷ்ய அரசியல்வாதிகள், இந்த அறிக்கைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன என்று விவரிக்கிறார்கள்.
ஏடிஏசிஎம்எஸ் தொடர்பான அமெரிக்காவின் முடிவு என்பது, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் யுக்ரேனிய படைகளின் பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு கடந்த ஆகஸ்டில், யுக்ரேன் திடீரென தாக்குதலைத் தொடங்கியது.
அதாவது, இப்போது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரஷ்ய நிலப்பரப்பின் சிறு பகுதியை தக்க வைத்துக் கொள்ளும் யுக்ரேனின் முயற்சிகளுக்கு உதவுவோம் என பைடனின் நிர்வாகம் உறுதியளிக்கிறது. வருங்கால பேச்சுவார்த்தைகளில் இந்த நிலப்பரப்பை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்தலாம் என யுக்ரேன் நினைக்கிறது.
போரின் போக்கை மாற்றுமா?
யுக்ரேன் தலைநகர் கீவை தளமாகக் கொண்ட யுக்ரேனிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தின் தலைவர் செர்ஹி குசான், ஜோ பைடனின் முடிவு தனது நாட்டிற்கு ‘மிகவும் முக்கியமானது’ என்று பிபிசியிடம் கூறினார்.
“இது போரின் போக்கை மாற்றும் ஒன்று அல்ல, ஆனால் அது எங்கள் படைகளை மேலும் வலிமை கொண்டதாக மாற்றும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.
ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ (186 மைல்கள்) வரை தாக்குதல் நடத்தக் கூடியவை. பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசுகையில், ‘யுக்ரேன், ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையைப் பயன்படுத்தலாம் என்ற பைடனின் அனுமதி, வட கொரிய வீரர்களை யுக்ரேனில் சண்டையிட அனுமதிக்கும் ரஷ்யாவின் முடிவிற்கு பதிலடியாக வந்தது’ என்று கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்து யுக்ரேனியப் படைகளை வெளியேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட ரஷ்ய மற்றும் கொரிய துருப்புகளின் தாக்குதலுக்கு முன்னதாகவே, ஏடிஏசிஎம்எஸ் குறித்து முடிவு வந்துள்ளதாக குசான் கூறினார். ரஷ்ய-வடகொரிய வீரர்களின் கூட்டுத் தாக்குதல் சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குர்ஸ்க் பகுதியில் 11,000 வட கொரிய வீரர்கள் இருப்பதாக யுக்ரேன் முன்னதாக மதிப்பிட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் பைடனின் முடிவால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm shadow) ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அனுமதி அளிக்கக்கூடும்.
பைடனின் முடிவுக்கு பிரிட்டன் அல்லது பிரான்ஸ் இதுவரை பதிலளிக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கைகள் குறித்து புதின் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை
கடந்த மாதம், யுக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள ரஷ்ய துருப்புகளைத் தாக்குவதற்கு முதன்முறையாக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரேன் பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.
யுக்ரேனிய படைகளுக்கான முக்கிய விநியோக மையமாக இருக்கும் போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி மெதுவாக முன்னேறி வரும் ரஷ்ய துருப்புகளை பின்னுக்குத் தள்ள, யுக்ரேன் பல மாதங்களாக போராடி வருகிறது.
யுக்ரேன் மீதான ட்ரோன் தாக்குதல்களின் எண்ணிக்கையையும் ரஷ்யா சமீப நாட்களில் பெருமளவில் அதிகரித்துள்ளது. யுக்ரேன் அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபரில் 2,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் யுக்ரேன் மீது ஏவப்பட்டன. இந்தப் போரில் இதுவொரு புதிய உச்சமாகும்.
சனிக்கிழமை அன்று ஒரே இரவில், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதனால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். ஜெலென்ஸ்கியின் கூற்றுப்படி, சுமார் 120 ஏவுகணைகள் மற்றும் 90 ட்ரோன்கள் ரஷ்யாவால் ஏவப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை மாலையும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள யுக்ரேனின் சுமி பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏவுகணை தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 8 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்ய அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை இரவு யுக்ரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறினர். ஆனால் தங்களது பாதுகாப்பு அமைப்பு யுக்ரேனின் 26 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அவர்கள் கூறினர்.
‘நட்பு நாடுகள் போதுமான ஆதரவை வழங்கவில்லை’
யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார்
யுக்ரேன் பல மாதங்களாக அதன் நட்பு நாடுகள் தனக்கு போதுமான ஆதரவை வழங்கவில்லை என்று வாதிட்டு வந்தது.
வரும் ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன், யுக்ரேனுக்கான உதவிகளை விரைவுபடுத்த முயன்று வருகிறார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், யுக்ரேனுக்கான ஆதரவை குறைப்பார் அல்லது நிறுத்துவார் என்ற ஊகங்கள் நிலவுகின்றன. பிற நாடுகளுக்கான ராணுவ உதவிகளால் அமெரிக்காவின் வளங்கள் வீணாகின்றன என்பது அவரது கருத்து. தன்னால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறிய அவர், அதை எவ்வாறு செய்யப் போகிறார் என்று கூறவில்லை.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.
ஜெர்மனியின் ஒரு ஆராய்ச்சி நிறுவனமான, ‘உலகப் பொருளாதாரத்திற்கான கீல் கழகத்தின்’ தகவலின் படி, போரின் தொடக்கத்திற்கும் ஜூன் 2024 இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், யுக்ரேனுக்கு 55.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவதற்கு அமெரிக்கா உறுதியளித்தது அல்லது வழங்கியுள்ளது.