ஈரான் ஜனாதிபதியின் மரணம் இலங்கைக்கான உதவிகளில் தாக்கம் செலுத்துமா?; விபத்தின் பின்னரான புவிசார் அரசியல் நிலைமை.
பல மணி நேரமாக நடத்தப்பட்ட மீட்பு பணிகளின் நிறைவில் ஈரான் ஜனாதிபதியின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
ஈரான் ஜனாதிபதியின் மரணம் இலங்கைக்கான உதவிகளில் தாக்கம் செலுத்துமா?; விபத்தின் பின்னரான புவிசார் அரசியல் நிலைமை.
ஈரான் இஸ்ரேல் மோதல்
கடந்த 2 மாதங்களுக்கு முன் இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருந்தது. இந்நிலையிலேயே, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளார். இதில் இஸ்ரேலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள் பலர் கணிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல்கள் நிலவிய காரணத்தால் ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பிற்கு இஸ்ரேல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஈரான் ஜனாதிபதி இப்ரஹீம் ரைசி உயிரிழந்த ஹெலிகொப்டர் விபத்துக்கும் இஸ்ரேலுக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை என இஸ்ரேலின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ”ஜெருசலம் போஸ்ட்” செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பிற்கு இஸ்ரேலின் மொசாட் அமைப்பு காரணம் என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதலளிக்கும் வகையிலேயே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளதாக குறித்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
ஈரான்-இலங்கை தொடர்பு
இயற்கை அனர்த்தமே இவருடைய மரணத்திற்கு காரணம் என ஈரான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும் கூட உலகளாவிய ரீதியில் இவருடைய மரணம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கும் இஸ்ரேல் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும் ஈரான் ஜனாதிபதி பெரும் சவாலாக விளங்கியுள்ளார். இஸ்ரேல் பலஸ்தீன போரில் துணிந்து பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பலஸ்தீனம் ஒரு தனிநாடு எனவும் தெரிவித்து வந்தார்.
உமா ஓயா திட்டம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்கு ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார். 1959 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட உமா ஓயா திட்டம் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமைய 2008 ஆம் ஆண்டு அப்போதைய ஈரானிய ஜனாதிபதி அஹ்மதிநெஜாத் உமா ஓயா திட்டத்திற்கு நிதியளிக்க முடிவு செய்தார். மொத்த திட்டச் செலவு தோராயமாக 529 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டதுடன், இதில் 85 வீதம் ஈரான் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
அமெரிக்கா கடும் எதிர்ப்பு
ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வருவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மறுபுறம் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போர் வெடித்துள்ள பின்னணியில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு பகிரங்க ஆதரவை வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இஸ்ரேலுடன் மிகவும் சிறந்த உறவை மேற்கொண்டு வந்தார்.
இலங்கை வரவேற்பு
ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் கூட ஆர்வத்தை காட்டினர். இலங்கையில் அவர் பயணிக்க இருந்த பாதைகள் மூடப்பட்டன. ஈரான் ஜனாதிபதியுடைய இலங்கை விஜயத்தின் போது அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. ‘இலங்கையின் வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக உதவுவதாகவும் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் கட்டியெழுப்புவதாகவும் இலங்கை மக்கள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ரைசி உறுதியாக வாக்களித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உமா ஒய திட்டத்துக்கான நிதியுதவி மட்டுமன்றி ஈரானிலிருந்து விசேட தொழிநுட்பத்துடன் கூடிய விடயங்களுக்கான ஆதரவையும் வழங்கியிருந்தார். இந்த நிலையில் ரைசியின் மரணத்தின் பின்னர் இலங்கைக்குரிய உதவிகள் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனாலும் ஈரான் வெளியுறவுக் கொள்கையில் அதுவும் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இல்லை. இதனால் உதவிகள் இலங்கைக்குத் தொடர்து கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம்.