வன்னியில் தொடரும் சிங்களக் குடியேற்றம்; காணிகளைக் கையளிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்து
வன்னியில் தொடரும் சிங்களக் குடியேற்றம்; காணிகளைக் கையளிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்.
முல்லைத்தீவில் இருந்து இரண்டு பேருந்துகளில் மே 8ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் பங்கேற்புடன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு கிராம சேவகர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 120ற்கும் மேற்பட்ட கிராம மக்கள், “எங்களுக்கு நீதி வேண்டும்” என்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிங்கள மக்கள் குடியேற்றம்
1984ஆம் ஆண்டு போரிலிருந்து உயிர் பிழைப்பதற்காக தமது இடத்தை விட்டு வெளியேறிய சுற்றுப்புற கிராம மக்கள், 11 வருடங்களுக்கு முன்னர் (2013) தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய போதும் அரசாங்கம் அந்த காணிகளை, மகாவலி எல் வலயத்திற்குள் கொண்டுவந்து, சிங்கள மக்களை குடியமர்த்தியதோடு, தமது காணிகளை விடுவிக்கவில்லை என போராட்டத்தின்போது யாழில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கொக்குத்தொடுவாய் கமநல அமைப்பின் தலைவர் சின்னப்பிள்ளை சிவகுரு தெரிவித்தார்.
“நாங்கள் 84ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் 2013இல் மீள் குடியேற்றம் செய்யப்பட்டோம். அதன்போது எங்களுடைய காணிகள் எல்லாம் மகாவலி எல் வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. நாங்கள் வயல் காணிகளில் விவசாய நடவடிக்கைக ளில் ஈடுபடுவதற்கு அனுமதிகள் தரப்படவில்லை.
எமக்கு சொந்தமான காணிகள் மகாவலி எல் வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டு சிங்கள மக்களுக்கு 25 ஏக்கர் என்ற அடிப்படையில் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாங்கள் எங்கள் காணியை துப்பரவு செய்ய முயன்றால் எமது எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றார்கள்.
ஆனால், சிங்கள மக்கள் எங்கள் காணியை துப்பரவு செய்யும்போது அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்கள்.
எங்களிடம் அனுமதிப் பத்திங்கள் காணப்பட்டாலும் அரச திணைக்களங்கள் எங்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள். மீள் குடியேறிய நாள் முதல் இந்த பிரச்சினை தொடர்கிறது.” என்றார்.
1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் தமிழர்களை அவர்களது கிராமங்களை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்திய போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளின் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சொந்தமாக சுமார் மூவாயிரம் ஏக்கர் விவசாய நிலம் காணப்பட்டதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.
தமிழ் மக்களுக்கான காணிகள் மீளக் கையளிக்கப்படவில்லை
2018ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கமநல சேவைகள் திணைக்களத்தினால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கான காணிகள் மீளக் கையளிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
“2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி கமநல சேவை திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய 2919 ஏக்கர் காணி 625 பயனாளிகளுக்கு உரியது. ஆனால் அந்த காணிகள் இன்று அந்த மக்களிடம் இல்லை. ஆனால் சிங்கள மக்கள் மகாவலி அதிகார சபையின் துணையுடன் அந்த காணிகளை துப்பரவு செய்து பயிர் செய்கின்றனர்.” என்றார்.
கடந்த (மே 8) வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் 625 பேரில் 120ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேறி சுமார் 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமது காணி பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழுள்ள பிரதேச செயலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், அதற்கு உரியத் தீர்வு கிடைக்காத நிலையில், யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை போராட்டக்காரர்கள் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள்
தமிழ் மக்களின் பரம்பரையாக வாழ்வதாக உரிமைக்கோரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கொக்குத்தொடுவாய் வடக்கு, மத்தி மற்றும் தெற்கு, கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அமைந்துள்ள பகுதியை அண்மித்து, எண்பதுகளில் நிறுவப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காணப்படுகின்றன.
சிங்களக் குடியேற்றங்கள், தொடர் தமிழ் இனப்படுகொலைகளால் ஏற்படுத்தப்பட்டவை என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி முல்லைத்தீவு ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 நிராயுதபாணிகளான தமிழர்களை வரவழைத்து சுட்டுக் கொன்ற அரச இராணுவம், விடுதலைப் புலி உறுப்பினர்கள் மறைந்திருப்பதாக மக்களை அச்சுறுத்தி, தமிழ் மக்களை அவர்களது கிராமங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சுந்தரம்பிள்ளை தங்கம்மா அந்த விரும்பத்தகாத கடந்த கால நினைவை பின்வருமாறு நினைவு கூர்ந்தார்.
“மூன்று நாட்கள் முப்பது வருடமானது“
“1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கள அரசாங்கத்தால எங்களைத் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டோம். மூன்று நாட்கள்தான் கால அவகாசம் சொன்னார்கள். மூன்று நாட்களில் மீள உங்களை விடுவோம். நாங்கள் விடுதலைப் புலிகளைத் தேட போகின்றோம். நச்சு புகை அடிக்கப்போகிறோம். உடனடியாக வாருங்கள் என, வாகனத்தில் எங்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றார்கள். மூன்று நாட்கள் எனக் கூறிய அரசாங்கம் 30 வருடங்களுக்கு பின்னர்தான் எங்களை மீள் குடியேற்றம் செய்தது.”
முல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் உள்ள பல தமிழ்க் கிராமங்களை இலக்கு வைத்து 1984 டிசம்பர் தொடக்கத்தில் இருந்து பதினைந்து நாட்களில் இடம்பெற்ற தொடர் படுகொலைகளில் ஒதியமலை இனப்படுகொலையும் ஒன்றாகும்.
கொக்கிளாய், தென்னைமரவாடி, அமரவயல், கொக்குத்தொடுவாய், அளம்பில், நாயாறு, குமிழமுனை மற்றும் மணலாறு ஆகிய தமிழ்க் கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர் ஜானக பெரேரா படுகொலையின் போது பிரதேசத்திற்கு கட்டளையிட்டார். தாக்குதலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு சிங்களக் குடியேற்றம் ஜானகபுர என அழைக்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்த பின்னர், தமது பூர்வீக கிராமங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த தமிழர்கள் 2010, 2011 மற்றும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தமது பூர்வீக நிலத்திற்குத் திரும்பிய போதிலும், முன்னர் அவர்கள் பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 3000 ஏக்கர் காணியில் மீண்டும் பயிர் செய்கையில் ஈடுபடுவதற்கு, இராணுவம், வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன இடையூறு செய்ததாக முன்னர் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
விவசாயம் இல்லை
இவ்வாறானதொரு பின்னணியில், 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமக்கு விவசாயம் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா சபை, தொல்பொருள் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரிப்பதாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, 1985ல் வனத்துறை உருவாக்கிய வரைபடத்திற்கு அமைய செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், 2023ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.