பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரை களமிறக்கி ‘தமிழ் மக்களின் வாழ்வை சிதைக்கும் திட்டம்’
.
வடக்கு, கிழக்கில் அரசியல் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணை செய்து அச்சுறுத்தி தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைக்கும் திட்டத்தை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (CTID) அழைக்கப்பட்ட ஏழு தமிழர்களின் விபரங்களைத் தெரிவித்த, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்த அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.ஜூன் 4ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி அன்றைய தினமே நாடாளுமன்றத்திலும் அவரால் சமர்ப்பிக்கப்பட்டது.கடிதம் அனுப்பப்பட்ட தினமான ஜுன் 4ஆம் திகதி தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கருப்பையா ஜெயக்குமார் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கடந்த பெப்பரவரி 14 மற்றும் மே 31ஆம் திகதிகளில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா, கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கொழும்பில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
எழுத்தாளரும், ஆசிரியரும், தீபச்செல்வன் என அறியப்படுபவருமான பாலேந்திரம் பிரதீபன் ஏப்ரல் 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
பூநகரிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் ஏப்ரல் 20ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஏப்ரல் 26ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
பூநகரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயச்சித்ரா தயானந்தன் மே 27ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கொழும்பில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மார்ச்மாதம் 26 ஆம் திகதி அன்று கைது வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு (CTID) அழைக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அவர் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட இவர், 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலி உறுப்பினராக இருந்த போது கைது செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டதாக அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காக அவர் நலன்புரிப் பணிகளைச் செய்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தியாவில் இருந்து இந்நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருகோணமலை மூதூர் பகுதியைச் சேர்ந்த எஸ். சுதாகரன் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கைதுகள் மற்றும் பயங்கரவாத பொலிஸ் விசாரணைகளை நிறுத்துமாறு கோரி சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வடக்கில் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிரான அடக்குமுறைகள், அரசு தொடர்பில் எதிர்மறையான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“வடக்கு, கிழக்க தமிழ்த் தேசிய தளத்தில் இயங்கும் பல ஆர்வலர்களின் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளை முடக்கி அவர்களை அச்சுறுத்தும் வகையிலான விசாரணைகளும், கைதுகளும் பரவலாக இடம்பெற்று வருகின்றமை தங்களது அரசு குறித்து எதிர்மறையான கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், சமகாலத்தில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் உங்கள் அவதானத்தை செலுத்துமாறு கேட்கின்றேன். “
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இவர்களை விடுதலையை விரைவுபடுத்துவதோடு எமது மக்களின் இயல்பு வாழ்வை சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துமாறு கேட்கின்றேன்.”