முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும்.
எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினக்கூட்டம்.
எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினக்கூட்டம்.
அத்தோடு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட எவருக்கும் தமது ஆட்சியின்கீழ் பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் அவர் நெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் கொழும்பில் புதன்கிழமை (மே.01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் பிரதான உரை நிகழ்த்தியபோதே அவர் அவர் இவ்வாறு சூளுரைத்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
நாம் காலிமுகத்திடலை எமது மே தினக் கூட்டத்துக்காக கேட்டோம். ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதேபோல் இதற்கு முன்னர் நாம் மே தினக்கூட்டங்களை நடத்திய இடங்களையாவது தாருங்கள் என கேட்டோம். ஆனால் எல்லாவற்றுக்கும் அரசாங்கம் ஒவ்வொரு காரணம் கூறி நிராகரித்தது. எனினும் இன்று நாம் நடத்திய சகல மே தினக்கூட்டங்களும் இலட்சக்கணக்கான மக்களால் நிரம்பியுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக ஊழலுக்கு எதிராகவும், பிரபு வர்க்கத்துக்கு எதிராகவும் பொதுமக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் துறைசார் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றது. எதிர்காலத்தில் சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், பெண் பிரதிநிதிகள், மதத்தலைவர்களுக்கான மாநாடுகளை நடத்த நாம் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதுமட்டுமல்ல, புலம்பெயர் இலங்கையர்களுடன் பல சந்திப்புகளை நாம் முன்னெடுத்துள்ளோம். வேறு எவரும் முன்னெடுக்காத வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.
இவை அனைத்தையும் தாண்டி சகல மக்களையும் எம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனைய கட்சிகளை இவ்வளவு காலம் நம்பியிருந்த அனைவரையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் தற்போது சகல மக்களுக்கும் எம்மீதான நம்பிக்கை உருவாக ஆரம்பித்துவிட்டது. அதற்கு இன்றைய கூட்டம் நல்லதொரு உதாரணமாகும். நாம் எந்தவொரு நபருக்கும் எதிராக எம்மை உருவாக்கவில்லை, இது சகல மக்களையும் ஒன்றிணைத்து புதிய ஆட்சியை, புதிய யுகத்தை நோக்கிய பயணமேயாகும். அதனையே நாம் உருவாக்கப்போகின்றோம். உலகை வெற்றிக்கொள்ளும் பலமான நாடாக நாம் உருவாக வேண்டும். அதற்காக சகல மக்களும் கட்சி பேதங்களை கைவிட்டு எம்முடன் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
இன்று யாரைக்கேட்டாலும் திசைக்காட்டி பற்றியே பேசுகின்றனர். கருத்துக்கணிப்புகளில் மட்டுமல்ல மக்களின் கணிப்பிலும் திசைகாட்டி மீதே நம்பிக்கை அதிகரித்துள்ளது. 76 ஆண்டுகால பயணத்தை மாற்றும் நோக்கத்தில் நாம் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். இதுவரை காலம் பழைய அரசியலுக்கு பழக்கப்பட்ட சமூகமே இன்று நாட்டில் உள்ளது.இதற்கு ஒரு மாற்றம் வேண்டாமா? ஆகவே இந்த சமூகத்தை மாற்றியமைக்கவே நாம் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இதில் எமக்கு கிடைக்கும் வெற்றி சாதாரண வெற்றியாக அல்ல மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும்.
இன்றளவிலே நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் வளங்கள் விற்கப்படுகின்றன. யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் உயிரிழக்கின்றன. முழு இயற்கை கட்டமைப்பையும் சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமையிலேயே நாட்டை வைத்திருக்க வேண்டுமா? இல்லை. மாறாக நாம் எதிர்நீச்சல் அடித்து நாட்டை மீட்டெடுக்க நினைக்கிறோம் என்றார்.