பெரமுனவின் அதிரடித் தீர்மானம்: கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன?
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்டு வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொட்டு கட்சியின் சிலர் தீர்மானித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சாகர காரியவசம் எந்தக் கடிதம் அனுப்பினாலும் அஞ்சப்போவதில்லை என தெரிவித்த கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த ஜனாதிபதி ஆற்றிய சேவையால் தான் தாம் இந்த தீர்மானங்களை எடுத்தாகவும் கூறியுள்ளார்.
சாகர காரியவசமின் கடிதத்திற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கட்சித் தலைவரின் உத்தரவின் பெயரில் செயற்படுகின்றாரா அல்லது உதயங்க வீரதுங்க தலைமையிலான குழுவினால் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் சாகர காரியவசத்தை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததிருந்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்வைப்பதற்கு எதிராகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையிலான நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் உயர் செயற்பாட்டு மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் (03) உடன்பாடு தெரிவித்துள்ளனர் .
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக இரு கைகளையும் உயர்த்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க,ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.