மகனை மகளாக அரவணைத்துக் கொண்ட தாயின் கருணை உள்ளம்!
அபிநயஸ்ரீயாக மாறிய அஜய்குமார்.
நவீன உலகில் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் பாலின மாற்றத்தை ஏற்கத் தயங்கும் நிலையில், மதுரையை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனின் உணர்வுகளை புரிந்து கொண்டு, பாலின அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் மகளோ, மகனோ... அவர்களின் பாலினத்தில் சற்று மாறுதல் ஏற்பட்டால்கூட ஏற்றுக்கொள்ள முடியாத பொது புத்தி பெற்றோர்கள் மத்தியில் இன்றும் உள்ளது. ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்காக தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்றி அவரை மகளாக்கிக் கொண்ட ஒரு தாயின் கருணை உணர்வு, அர்ப்பணிப்பை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி. 15 வருடங்களுக்கு முன் இவரது கணவர் குடும்பத்தை அனாதையாக விட்டுச் சென்றுவிட்டார். அதனால் போராட்டமாக மாறி வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டு, தனியொருவராய் போராடி கிடைத்த வேலைகளை செய்து, மகன் அஜய்குமார் (23) மற்றும் ஒரு மகளை ஆளாக்கி உள்ளார் நாகஜோதி.
அவரது இரண்டு பிள்ளைகளும் கல்வியில் சிறந்தவர்கள். குறிப்பாக அஜய் படிப்பில் படுசுட்டி. ஆனால், அஜய்குமார் ஏழாவது படிக்கும்போது மனதளவில் அவருக்கு ஏற்பட்ட மாற்றம் அவரது வாழ்க்கையையே ஒட்டுமொத்த மாற்றிபோடும் என்று தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று நம்மிடம் பேச துவங்கினார் நாகஜோதி.
சத்தியம் வாங்கிய தாய்
"ஆறாவது, ஏழாவது படிக்கும் போது அவனிடம் சற்று மாற்றம் தெரிந்தது. ஆனால் அதனை முழுதாக என்னால் உணர முடியவில்லை. அப்போது தான் மகள் என்னிடம், "அம்மா, அண்ணே என்ன மாதிரி பூ, பவுடர், தோடு, டிரஸ் எல்லாம் போடணும்னு விரும்புதும்மா" என்று கூறியபோது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நாம் பெற்ற பிள்ளை, அவனுக்கு நாம் தான் துணையாக இருக்க வேண்டும் என எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு அஜய்யை அழைத்து பேசினேன்" என்று தமது மகனின் வாழ்க்கையை விவரிக்க துவங்கினார் நாகஜோதி.
"நமது சொந்த, பந்தங்கள் நம்மை புரிந்துகொள்ளமாட்டார்கள், அம்மா நான் புரிந்து கொள்கிறேன். நீ உன் விருப்பப்படி வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் எந்த காரணத்தை கொண்டும் பிச்சை எடுக்க மாட்டேன், தவறான செயல்களில் ஈடுபடமாட்டேன் என சத்தியம் செய்ய கூறினேன்.அவனும் ஒப்புக் கொண்டான்" என்றார்.
ஆனால், "அதற்கு பின்னர், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் அவனால் படிப்பை தொடர முடியவில்லை. மேலும் கல்லூரியில் சேர்ந்த போதும், அங்கும் இதே பிரச்சனை நீடித்ததால் திருப்பூருக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டோம்" என நாகஜோதி கூறினார்.
தொடர்ந்து கண்ணீர் மல்க பேசிய அவர், "அபிநயஸ்ரீ என பெயர் மாற்றப்பட்ட அஜய்குமார் தற்போது பனியன் கம்பெனியில் வாரம் 5000 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்வதாகவும், அபிநயஸ்ரீ-யின் தங்கைக்கு திருமணம் முடித்து விட்டேன்," என்வும் நாகஜோதி தெரிவித்தார்.
சமீபத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அபிநயஸ்ரீ, மருத்துவமனையில் இருந்தபடி தனது தாயை ஆறுதல்படுத்தி விட்டு நம்மிடம் பேசினார்.
'தாயை கடவுளுக்கு மேலாக பார்க்கிறேன்'
"திருப்பூரில் வேலைக்கு சென்று வரும் போது பலமுறை பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் ஒரு மாதம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அந்த நேரத்தில் தற்கொலைக்கு முயன்றேன். அப்போது எனது தாய் என்னை காப்பாற்றி, வாழ்ந்து காட்ட வேண்டும் என ஊக்கம் அளித்தார்.
எனது தாயை கடவுளுக்கு மேல் பார்க்கிறேன். நான் ஆசைப்பட்டது போல என்னை பெண்ணாக மாற்றி அழகு பார்க்கிறார்கள். கலெக்டராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. குறிப்பாக குடும்பத்தினரால் ஒதுக்கப்படுகிற திருநங்கைகள், திருநம்பிகளை பாதுகாக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். நமது சமூகத்தில் சாதிக்கு பிறகு சுயகௌவரம் முக்கியமாக பார்க்கின்றனர். மேலும் மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் படித்தவர்கள் அதிகமாக இது போன்று எண்ணத்தில் உள்ளனர்” என்றார் அபிநயஸ்ரீ என்கிற அஜய்குமார்.
'தியாக தாய்'
அபிநயஸ்ரீயின் படிப்புக்கும், வாழ்க்கை மேம்பாட்டிற்கும் உதவி செய்து வரும் மதுரை நரிமேட்டில் உள்ள திருநங்கை/திருநம்பிகள் ஆய்வு மற்றும் ஆவண மையத்தின் நிர்வாக அறங்காவலர் ப்ரியாபாபு கூறுகையில், ”தன்னுடைய மகனின் ஆசைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட நாகஜோதியின் இந்த செயல்பாடு தான் சமூகத்திற்கான முக்கிய செய்தி. கடந்த ஆறு மாதங்களாக அபிநயஸ்ரீக்கு நடைபெற்று வரும் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான ஹார்மோன், லேசர் சிகிச்சைகளின் போது தொடர்ந்து உடனிருந்து தனது மகனுக்காக ஒரு தாயாக அவர் மேற்காண்டுள்ள பணிகள், செய்துள்ள தியாகங்கள் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமான செயல்பாடாகும். இதனை இங்குள்ள எல்லா தாய்மார்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஆணோ, பெண்ணோ, மாற்று பாலினமோ எதுவாக இருந்தாலும், அதனை ஏற்றுக் கொண்டு வாழ்வதும், வாழ வைப்பதும் தான் உண்மையான தியாகம்” என்கிறார்.
இலவச சிகிச்சை
இது போன்ற சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் குறைந்தபட்சம் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும். ஹார்மோன் மற்றும் லேசர் சிகிச்சை, பாலியல் உறுப்பு அறுவை சிகிச்சை என இவை அனைத்தும் இலவசமாகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ பிரிவில் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பிரிவில் தற்போது வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சத்தியம் வாங்கிய தாய்
"ஆறாவது, ஏழாவது படிக்கும் போது அவனிடம் சற்று மாற்றம் தெரிந்தது. ஆனால் அதனை முழுதாக என்னால் உணர முடியவில்லை. அப்போது தான் மகள் என்னிடம், "அம்மா, அண்ணே என்ன மாதிரி பூ, பவுடர், தோடு, டிரஸ் எல்லாம் போடணும்னு விரும்புதும்மா" என்று கூறியபோது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நாம் பெற்ற பிள்ளை, அவனுக்கு நாம் தான் துணையாக இருக்க வேண்டும் என எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு அஜய்யை அழைத்து பேசினேன்" என்று தமது மகனின் வாழ்க்கையை விவரிக்க துவங்கினார் நாகஜோதி.
"நமது சொந்த, பந்தங்கள் நம்மை புரிந்துகொள்ளமாட்டார்கள், அம்மா நான் புரிந்து கொள்கிறேன். நீ உன் விருப்பப்படி வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் எந்த காரணத்தை கொண்டும் பிச்சை எடுக்க மாட்டேன், தவறான செயல்களில் ஈடுபடமாட்டேன் என சத்தியம் செய்ய கூறினேன்.அவனும் ஒப்புக் கொண்டான்" என்றார்.
”நமக்கு குழந்தை பிறக்கும் போது கை, கால் ஊனத்துடன் பிறந்தால், அதனை நாம் அப்படியே விட்டுருவோமா சார்? அதே போல் தான் இதையும் பாக்கணும். தன்னோட பள்ளிக் காலத்தில் அபிநயஸ்ரீக்கு ஏற்பட்ட துன்பங்கள் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. பாலின மாறுதல்களால் நாம் அவர்களை கைவிட்டால் நாளை அவர்களது வாழ்க்கை பாதை மாறி சீரழிந்துவிடும். அதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது” என்கிறார் நாகஜோதி உறுதியும், கண்டிப்புமான குரலுடன்.


