நிலுவை வரித்தொகை செலுத்தப்படாமையால் மென்டிஸ் நிறுவனத்தின் 8 மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தியுள்ளது!
.
அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை வரித் தொகையை செலுத்தாமையால் W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 10 மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரங்களில் 8 பத்திரங்களை இன்று(04) முதல் இடைநிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது.
W.M.மென்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய முழுமையான நிலுவை வரித் தொகையை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தாவிட்டால் தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து கலால்வரி திணைக்களத்தால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி W.M.மென்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்காது தள்ளுபடி செய்யவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.