அடுத்த சர்ச்சை.... கல்லூரி மாணவர்களிடம் 'ஜெய்ஸ்ரீராம்' கோஷம் எழுப்ப சொன்ன ஆளுநர்!
கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, மாணவர்களை 'ஜெய்ஸ்ரீராம்' கோஷம் எழுப்பச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, மசோதா நிறுத்தி வைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளான நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிக்கியுள்ளார்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இன்று 'கல்விக் கூடங்களில் கம்பர்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கம்பரையும், கம்ப ராமாயணத்தையும் நாம் என்றுமே மறக்கக் கூடாது. அப்படி நாம் மறந்துவிட்டால், அது நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் மறந்து விட்டதற்கு சமம். கம்பர் நமக்கு பல நல்ல விஷயங்களை கம்ப ராமாயணத்தில் கற்றுத் தந்திருக்கிறார். குறிப்பாக, பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
உதாரணமாக, வால்மீகி ராமாயணத்தில் சீதையை ராவணன், தொட்டு தூக்கி செல்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், கம்பர் அதை விரும்பவில்லை. ராவணன் சீதையை தொடுவதை கம்பர் விரும்பவில்லை. அது தான் பெண்களுக்கு அவர் கொடுத்த மரியாதை. ஆனால், இன்று என்ன நடக்கிறது? தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியில் ஓர் உயர் பதவியில் இருப்பவர் (பொன்முடி) பெண்களை பொதுவெளியில் இழிவாக பேசுகிறார். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என ஆர்.என். ரவி பேசினார்.
இந்நிலையில், தனது உரையை முடிப்பதற்கு முன்பு அங்கிருந்த மாணவர்களிடம், தான் சொல்வதை அப்படியே திருப்பி சொல்லுங்கள் எனக் கூறி விட்டு, ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார். மாணவர்களும் திருப்பி அந்த கோஷத்தை எழுப்பினர். மதம் சாராத கல்வி நிலையத்தில் ஆளுநர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பியது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.