சீன இறக்குமதிகளுக்கு 60% வரை வரி விதிக்க டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
.

சீனாவுடனான அமெரிக்காவின் அணுகுமுறை உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், சீனாவுடன் கடுமையான வர்த்தகப் போரைத் தூண்டினார். இந்த முறை, அமெரிக்காவுக்கான சீன இறக்குமதிகளுக்கு 60% வரை வரி விதிக்க அவர் பரிந்துரைத்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிகளுக்கு டிரம்பின் தேர்வாக இருக்கும் மார்கோ ரூபியோ மற்றும் மைக் வால்ட்ஸ் ஆகிய இருவருமே சீனா மீது கடுமையான நிலைபாட்டைக் கொண்டவர்கள் என்று கருதப்படுகிறது. சீனாவை ஒரு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள் என்பதை இருவரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தைவான் ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது. இந்த சுயாட்சி தீவுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தைவானை, தங்களிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு மாகாணமாக கருதும் சீனா, அது ஒருநாள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று நம்புகிறது.
ஒருவேளை சீனா தைவானை ஆக்கிரமித்தால், அமெரிக்கா அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது குறித்து இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் தெளிவாகக் கூறியதில்லை.
இருப்பினும் முந்தைய அதிபர்களுடன் ஒப்பிடுகையில், "அமெரிக்கா தைவானைப் பாதுகாக்கும்" என்று பைடன் வெளிப்படையாகவே கூறினார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, 'தைவான் மீதான முற்றுகையைத் தடுக்க ராணுவ சக்தியைப் பயன்படுத்த வேண்டியதில்லை' என்று டிரம்ப் கூறினார். அதற்கு காரணம் 'சீன அதிபர் ஜின்பிங் தன்னை மதிப்பதாகவும், தனது குணத்தைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும்' என்றும் டிரம்ப் கூறினார்.
அதையும் மீறி சீனா செயல்பட்டால், சீன இறக்குமதிகள் மீது மிகக் கடுமையான வரிகள் விதிக்கப் போவதாகவும் கூறினார்.