இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார் - பிரபலங்கள் இரங்கல்
சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று (25) மாலை 6 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 48. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 48.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 6 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் .மனோஜ் ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, உயிரிழந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரை கேசரினா டிரைவில் உள்ள இயக்குநர் பாரதிராஜா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரை உலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், தொடர்ந்து அவரது இறுதி சடங்கு மார்ச் 26 மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோஜின் திரை பயணம்:
பாரதிராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு கதாநாயகனாக மனோஜ் அறிமுகமானார். அதன் பின்னர் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பாரதிராஜா, சுசீந்திரன் மற்றும் சில புதுமுக நடிகர்களை வைத்து 2023 -இல் 'மார்கழித் திங்கள்' என்னும் படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார். இவர் நடிக்க வருவதற்கு முன்னர் இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
'எங்கே அந்த வெண்ணிலா', 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்', 'திருப்பாச்சி அருவாள' ஆகிய பாடல்கள் மூலம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார் மனோஜ்.
இவர் மலையாள நடிகை அஸ்வதி (எ) நந்தனா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹர்ஷிதா, மதிவதனி என இரு மகள்கள் உள்ளனர்.
இவர் கடைசியாக 2022ல் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மனோஜின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனோஜ் பாரதியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபலங்கள் இரங்கல்:
முதலமைச்சர் ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள்.
இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், "எனது நண்பன் பாரதியின் (பாரதிராஜா) மகனான மனோஜ்குமார் மறைந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். இப்படியொரு சோகம் பாரதிக்கு நேர்ந்திருக்க வேண்டாம். மனோஜின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்." என்று இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.