சென்னையில் தயாராகும் நவீன 'மாட்டுக்கொட்டகை'; இனி மாநகரத்திலும் கிராமிய மணம் வீசும்!
மாடு வளர்க்க விருப்பம் இருந்தும் இடம் இல்லாதவர்களுக்கு இந்த மாட்டுக்கொட்டகை வரப்பிரசாதமாக இருக்கும்!

சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு, மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கவும் செய்கிறது.
வாகன ஓட்டிகளின் நீண்ட கால கோரிக்கை:
அதேசமயம் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதை நிறைவேற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்கும் வகையில் மண்டலம் வாரியாக மாட்டுக் கொட்டகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகள் அனைத்து மண்டலங்களிலும் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
200 மாடுகள் வரை பராமரிக்க இட வசதி:
அதன்படி, ராயபுரம் மண்டலத்தின் (5-வது மண்டலம்) 53-வது வார்டுக்குட்பட்ட மூலக்கொத்தளம் பேசின் பாலம் சாலையில் வெளியே சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் மாடுகளை பராமரிப்பதற்காக மாட்டு கொட்டகை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு 200 மாடுகள் வரை பராமரிக்க இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் மாடு வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இந்த மாட்டு கொட்டகையில் கொண்டு வந்து விடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பால் கறக்கவும், தீனி போடவும் தனி இடம்:
இந்த கொட்டகையில் பராமரிப்பு செலவிற்காக ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. மேலும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மாடுகளை பராமரிப்பு பணியை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. அதேபோன்று உரிமையாளர்கள் காலை, மாலை என்று இரு வேளைகளிலும் இங்கு வந்து பால் கறந்து செல்லவும், அவர்களது மாடுகளுக்கு தீனி போடவும் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாடுகளுக்கு தீவனம் வழங்குவது, சாணத்தை அப்புறப்படுத்துவது, மாட்டை குளிக்க வைப்பது ஆகியவற்றுக்கும் நவீன முறையில் இந்த மாட்டு கொட்டகை தயாராகி வருகிறது.
வாக்கிங் சென்று புத்துணர்ச்சி பெற ஏற்பாடு:
இந்த கொட்டகையில் மாடுகள் கட்டி வைக்கப்படுகிற இடத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாடுகளை பராமரிக்கும் கால்நடை மருத்துவர்களுக்கு என்று ஒரு அறையும், மருந்துகளை கையாள்வதற்கு ஒரு அறையும் கட்டப்பட்டு வருகிறது. பெரிய மாடுகளுக்கு எப்படி தனி இடம் வழங்கப்படுகிறதோ? அதேபோல் கன்றுக்குட்டிகள், கருவடைந்த மாடுகளை பராமரிப்பதற்காகவும் தனித்தனி இடம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் கொட்டகைக்கு வரும் மாடுகள் ஒரே இடத்தில் நிற்காமல் கொட்டகையை சுற்றி வாக்கிங் செல்லவும், தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாடுகள் புத்துணர்ச்சியை பெறும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
மாடு வளர்க்க இடம் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை
மேலும், மாடுகள் வெளியேற்றும் கழிவுகளை தனியாக சேமிக்க கொட்டகை வளாகத்திலேயே ஒரு இடம் அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளை வளர்க்க இடமில்லாமல் இருப்பவர்களுக்கு முதலில் இந்த கொட்டகையில் தங்களது மாடுகளை பராமரித்துக்கொள்ள முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த மாட்டுக் கொட்டகை திறக்கப்பட இருக்கிறது. இந்த மாட்டுக் கொட்டகை இன்னும் 3 மாதங்களில் 600 மாடுகளை பராமரித்திடும் அளவிற்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. மூலக்கொத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுக்கொட்டகை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வரப்பிரசாத திட்டம்
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வன் கூறுகையில், ''இந்த பகுதியில் மாடுகள் அதிக அளவு சுற்றித்திரிகின்றன. இவை அடிக்கடி சாலையின் குறுக்கே புகுந்து விடுவதால் எங்களால் வண்டி ஓட்ட முடியவில்லை. மேலும் வழிமறித்துக் கொண்டு இடையூறு செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மாட்டின் உரிமையாளர்கள் யார்? என்றும் தெரியவில்லை. தெரிந்தாலும் அவர்களை நாங்கள் மாடுகளை வெளியே விடாதீர்கள் என்று கூறுகிறோம். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டையும் வந்திருக்கிறது.
இங்கு மட்டுமல்லாமல் கோயம்பேடு உள்பட முக்கியமான இடங்களில், அதிகமாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இது பொதுமக்களுக்கு மட்டுமின்றி மாடுகளுக்கும் பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாலையோரங்களில் கிடக்கின்ற பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சாப்பிட்டு அவை உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி மாட்டுக்கொட்டகை அமைப்பது வரவேற்கத்தக்கது.
இதன் மூலம் மாடுகள் ஒரே இடத்திலும் பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும், மாடு வளர்க்க விருப்பம் இருந்தும் இடம் இல்லாதவர்களுக்கு இந்த மாட்டுக்கொட்டகை வரப்பிரசாதமாக இருக்கும் என்பதால் இது ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த அருமையான திட்டத்தை மாநகராட்சி மேலும் பல்வேறு இடங்களிலும் விரைவில் செயல்படுத்தும் என்று நம்புகிறேன்." என்று செல்வன் கூறினார்.