முல்லைத்தீவு கடற்கரையில் ஆடம்பர ஹோட்டலுக்காக வீதியை ஆக்கிரமித்த வர்த்தகர்: அம்பலமான உண்மை
.
சுமார் அரை நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தப்படும் ‘தியோநகர் வீதி’ என அறியப்படும் குறித்த வீதியை, அதற்காகப் போராடிய உள்ளூர்வாசிகள் இடையூறின்றி பயன்படுத்தும் உரிமையை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
50 வருடங்களுக்கு மேலாக பிரதேச மக்களால் பயன்படுத்தப்படும் குறித்த வீதியானது பிரதேச சபைக்குச் சொந்தமானது என, கடந்த வார இறுதியில் சிலாவத்தை தெற்கில் கொங்கிறீட் தூண்களால் கட்டப்பட்ட முள்வேலிக்கு எதிர்ப்புத் தெரிவித்த பல அமைப்புக்களுக்கு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.
“சிலாவத்துறை தெற்கு கடற்றொழிலாளர் கூட்டறவுச் சங்க மீன்பிடித்துறைக்கு செல்லும் வீதியென தங்களால் குறிப்பிடப்பட்ட குறித்த வீதியானது கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உரித்தான NMUME283 ஆம் இலக்க தியோகுநகர் வீதியாகும்,” என பிரதேச சபையின் செயலாளர் இராசயோகினி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த வீதியை பயன்படுத்துவதற்கு எவரேனும் இடையூறு ஏற்படுத்தினால், நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளுராட்சி சபைக்கு காணப்படுவதாகவும், சிலாவத்தை தெற்கு மீனவர் அமைப்பு, மகளிர் அமைப்பு, விளையாட்டு கழகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இவ்வீதி சார்பாக எவரேனும் தடை ஏற்படுமிடத்து அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கரைத்துறைப்பற்று பிரதேச சபையையே சாரும் என்பதையும் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.”
அவலோன் ரெசோட் அன்ட் ஸ்பா (Avalon Resort and Spa (pvt) Ltd) என்ற தனியார் நிறுவனம், மே 26ஆம் திகதி, முல்லைத்தீவு தியோ நகர் மக்கள் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக கடலுக்குச் சென்று வந்த வீதியை மறித்து, மீனவர்களின் போக்குவரத்தை தடுத்தது.
இதன் உரிமையாளரான சார்ள்ஸ்ஜந்தன் அன்டனி, கனடா, டொராண்டோவின் கென்பீ புட்ஸ் (Canbe Foods) நிறுவனத்தின் உரிமையாளராவார். இவர் 1990 இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்.
நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த வீதியை கடக்க தடையாக இருந்த வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க மீனவர்கள், ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தாம் பயன்படுத்தி வரும் வீதியை விடுவிக்கக் கோரி அன்றைய தினம் இரவே அந்த இடத்தில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மே 27ஆம் திகதி, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரின் பிரதிநிதி, பிரதேச சபையின் செயலாளர், கிராம சேவகர் உள்ளிட்டவர்கள் போராட்டக்களத்தில் கிராம மக்களுடன் பேச்சு நடத்தி, அவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.
இதற்கமைய கடந்த மே மாதம் 28ஆம் திகதி பல உள்ளூர் அமைப்புக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை தெளிவுபடுத்தி பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவித்து மறுநாள் பிரதேச சபை செயலாளர் கடிதத்திற்கு பதிலளித்து இதுத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
50 வருடங்களாக தாம் பயன்படுத்திய வீதியை எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்த பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளதாக, தியோநகர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர், பிரதேச சபை செயலாளரின் பதில் கடிதம் தொடர்பில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.
“எமக்கு பிரதேச சபையின் செயலாளரினால் இந்த வீதி பிரதேச சபைக்குரியது எனவும் இதில் எந்த அமைப்புக்களோ தனியார் அமைப்புகளோ தலையிட இயலாது எனவும் இதுத் தொடர்பில் தாங்களே பொறுப்பு எனவும் கூறி, இந்த வீதியால் போக்குவரத்து செய்து தொழில் செய்வதற்கு அனுமதி தந்துள்ளார்கள்.”
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் இராசயோகினி ஜெயக்குமார் அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர், சிலாவத்தை தெற்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.