ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விவாதம் ஜூன் 6
.
6 ஆம் திகதி சஜித்-அனுர விவாதம்.
சஜித் பிரேமதாஸவுடனான விவாதத்திற்கு வழங்கப்பட்ட திகதிகளில் இருந்து, அனுரகுமார திஸாநாயக்க, ஜூன் 6ஆம் திகதியை ஏற்றுக் கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில், அதன் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, விவாதத்தை தயாரிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி நியமித்த நளின் பண்டாரவுடன் விவாதம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் நோக்கம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
முன்னதாக இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையிலான விவாதம் மே 27 முதல் 31ஆம் திகதி வரையிலும், கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதம் ஜூன் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தார்.
இது குறித்து தேசிய மக்கள் சக்திக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவாதத்திற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவாதத்தை செய்தி சேகரிக்க அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.