ரயில் பணிமனை ஊழியரை காணவில்லை: பணிமனையில் இருந்து ரயில்கள் பயணங்களை ஆரம்பிப்பதில் தாமதம்
.
கொழும்பு தெமட்டகொட புகையிரத நிலைய வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கடமையில் இருந்து விலகியதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன சக ஊழியரைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி தெமட்டகொட வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியை நிறுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சில ரயில்கள் இரத்துச் செய்யப்படுவதோடு தொடர்புடைய சேவைகளில் தாமதங்களும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்படவிருந்த பொடி மெனிகே மற்றும் பதுளை ஒடிசி புகையிரதங்கள் இதுவரையில் சேவையில் ஈடுபடவில்லை என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (செயல்பாடுகள்) என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.