கம்பஹா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவை வெற்றிகொண்ட ரணில்: எத்தனை பேர் ஆதரவு?
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பொல அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டச் சபைக் கூட்டத்தில் இந்தக் குழு இந்த உறுதிமொழியை வழங்கியது.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுள் 09 பேர் ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாலக கொடஹேவா சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் கட்சியில் இணைந்துகொண்டார்.
மேலும், இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர மற்றும் இந்திக அனுருத்த ஆகியோர் கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் செயற்படுகின்ற நிலையில், சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேவின் நிலைப்பாடு இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. ஆனால் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க அவரும் தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய அமைச்சர் நளீன் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியண்ணவும் ஜனாதிபதிக்கு ஆதரவளித்து வருகிறார்.
அதன்படி நேற்றைய மாவட்ட சபை கூட்டத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மிலான் ஜயதிலக்க, சஹன் பிரதீப் விதான, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சிசிர ஜயகொடி உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் 16 முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களில் 13 பேரும் உள்ளூராட்சி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 350 முன்னாள் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இவர்களில் கம்பஹா மாநகர சபையின் முன்னாள் தலைவர், கம்பஹா, பியகம, ஜா எல, களனி, மஹர ஆகிய பிரதேச சபை மற்றும் மினுவாங்கொட நகரசபை ஆகிய உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர் மொட்டுக் கட்சியின் கருத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
அவை ஏற்கனவே தொகுதிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. ஆனால் அந்த உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாநகர சபைகளின் முன்னாள் உப தலைவர்கள் மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தலைமையில் திவுலப்பிட்டியவில் இடம்பெற்ற கூட்டத்தில் 123 பேர் மாத்திரமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், 06 முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உட்பட 20க்கும் குறைவான உறுப்பினர்களே கலந்து கொண்டனர். மற்றைய குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத வெளியாட்கள் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நேற்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற மாவட்ட சபைக் கூட்டத்திற்கு கட்டுநாயக்க – சீதுவ நகர சபையின் முன்னாள் தலைவர் சமில் நிஷாந்த உட்பட சுமார் 10 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வந்து ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த தம்மை அர்ப்பணிப்பதாக உறுதியளித்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த போதிலும், தாம் இன்னமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராகவே உள்ளதாகக் குறிப்பிட்டார். கட்சி பதவிகளை வழங்காவிட்டாலும் மக்கள் வழங்கிய பதவிகளே தனக்கு போதுமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.