ஒற்றையாட்சியை ஏற்கவியலாது; சமஷ்டியே எமக்கான தீர்வு - தமிழ்த்தேசிய அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் கூட்டாகத் தெரிவிப்பு,
,

ஒற்றையாட்சி முறைமையே இனப்பிரச்சினையாக அடிப்படைக்காரணமாக விளங்குவதாகவும், எனவே தம்மால் ஒருபோதும் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொள்ளவியலாது எனவும் கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனிடம் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தாம் கோரிநிற்கும் சமஷ்டித்தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வலுவான அழுத்தங்களை கனடா பிரயோகிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
அதுமாத்திரமன்றி சமஷ்டி முறைமை தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவசியமான நிதியளிப்பை மேற்கொள்வதற்கு கனடா முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (22) நாட்டுக்கு வருகைதந்த கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் மேரி-லூயிஸ் ஹனனுக்கும், வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு கொழும்பிலுள்ள கனேடிய இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனுடன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரி சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அதேபோன்று தமிழ்த்தேசியக்கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகதாசன் குகதாசன், சாணயக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது குறிப்பாக வட, கிழக்கு தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் விவகாரத்தில் தமிழர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் மேரி-லூயிஸ் ஹனனிடமும், கனேடிய உயர்ஸ்தானிகரிடமும் எடுத்துரைத்தனர்.
புதிய அரசாங்கத்தின் மீதான அதிருப்தி
அண்மையில் ஆட்சிபீடமேறியிருக்கும் புதிய அரசாங்கத்துக்கும், கடந்த காலங்களில் ஆட்சிசெய்த முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் எவையுமில்லை எனச் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், 'முன்னைய அரசாங்கங்கள் கூட இனப்பிரச்சினை குறித்து வார்த்தையளவில் பேசி வந்தன. இருப்பினும் தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினை நிலவுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதற்கே தயாராக இல்லை. குறைந்தபட்சம் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் கூடத் தேவையில்லை என்றவாறான நிலைப்பாட்டியே இவ்வரசாங்கம் இருக்கின்றது' என விசனம் வெளியிட்டனர்.
அரசியல் தீர்வு
இச்சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து கூட்டாகக் கருத்து வெளியிட்ட தமிழ்ப்பிரதிநிதிகள், தம்மால் ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவியலாது எனவும், மாறாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே தாம் கோருவதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பாக ஒற்றையாட்சி தான் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணம் எனச் சுட்டிக்காட்டி அதுபற்றி விளக்கமளித்த அவர்கள், தற்போது ஒற்றையாட்சியின் ஊடாக தமிழர்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சிங்களமயமாக்கப்பட்டுவருவதாக விசனம் வெளியிட்டனர். அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டிருப்பினும், அதன் பெருமளவான அதிகாரங்களைத் தன்வசம் வைத்திருக்கும் ஆளுநரால் நிர்வாக செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், எனவே இவையனைத்தையும் புறந்தள்ளி தாம் சமஷ்டி முறையிலான தீர்வையே கோரிநிற்பதாகக் குறிப்பிட்டனர்.
பொறுப்புக்கூறல்
அதேவேளை கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான மிகைய அழுத்தங்களை வழங்கி, அச்செயன்முறையை அதிதீவிரமாக முன்னெடுப்பதற்கு கனடா உதவவேண்டும் என வலியுறுத்திய தமிழர் பிரதிநிதிகள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
'தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் கடந்தகால மீறல்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணையையே கோருகின்றனர். இருப்பினும் அரசாங்கம் அதுகுறித்து அக்கறை காண்பிக்கவில்லை. மாறாக உள்ளகப்பொறிமுறைகள் எனக்கூறி அரசாங்கத்தினால் நிறுவப்பட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றன எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. ஆகவே இவ்விடயத்தில் சர்வதேச பொறிமுறையொன்றை நோக்கி நகர்வதற்கு கனடா முன்னின்று வலுவாகச் செயற்படவேண்டும்' எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டல்
மேலும் சமாதானப்பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலப்பகுதியில் 'சமஷ்டி' குறித்து மக்கள் மத்தியில் தெளிவூட்டுவதற்கு அவசியமான நிதியளிப்புக்களை கனடா மேற்கொண்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போது சிங்கள மக்கள் மத்தியில் 'சமஷ்டி முறைமை' தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதற்கு நிதியளிக்க முன்வரவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
அந்த யோசனையை வரவேற்ற மேரி-லூயிஸ், அதற்கு நிதியளிப்பது குறித்து தாம் அவதானம் செலுத்துவதாக உறுதியளித்தார்.
அதுமாத்திரமன்றி தாம் (உயர்ஸ்தானிகராலயம்) பெரும்பாலும் கொழும்பை மையப்படுத்தி இயங்கிவருவதன் காரணமாக இவ்வாறான கருத்துக்களை மிகக்குறைந்த அளவிலேயே அறிந்துகொள்ளமுடிவதாகக் குறிப்பிட்டார். அத்தோடு இச்சந்திப்பு வித்தியாசமானதாகவும், விழிப்பூட்டக்கூடியவகையிலும் அமைந்திருந்ததாகவும் அவர் தமிழர் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
மேலும் தாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், அதன்போது தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் விரிவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின்போது வட, கிழக்கில் நிகழும் காணி அபகரிப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள், பௌத்த சிங்கள மயமாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி தமிழ்ப்பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.