Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடக்கு, கிழக்கில் அடக்குமுறை அதிகரிப்பு; பயங்கரவாத தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வரும் புதிய திட்டம்.

வடக்கு, கிழக்கில் அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக விசாரணை.

தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்.

வடக்கு, கிழக்கில் அரசியல் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணை செய்து அச்சுறுத்தி தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைக்கும் திட்டத்தை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதன்படி, கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (CTID) அழைக்கப்பட்ட ஏழு தமிழர்களின் விவரங்களைத் தெரிவித்து, இந்த அடக்குமுறையை இடைநிறுத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் ஜூன் மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் அன்றைய தினம் அவரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில்,

* கடிதம் அனுப்பப்பட்ட தினத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கருப்பையா ஜெயக்குமார் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

*இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார் 2024 பெப்ரவரி 14 மற்றும் மே 31 ஆகிய திகதிகளில் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

* கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா, ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

* ஏப்ரல் 11ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தீபச்செல்வன் என்ற தமிழ் வாசகர்களிடையே பிரபல எழுத்தாளரான பாலேந்திரன் பிரதீபன் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

*பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சிவகுமாரன் ஸ்ரீ ரஞ்சன் ஏப்ரல் 20ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

*கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஏப்ரல் 26ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

* பூநகரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசித்ரா தயானந்தன் மே 27ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் கொழும்பு அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு (CTID) அழைக்கப்பட்டு அதன் பின்னர் கைது செய்யப்பட்டார் எனவும் அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட இவர், 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலி உறுப்பினராக இருந்த போது கைது செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காக நலன்புரிப் பணிகளைச் செய்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும்போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் திருகோணமலை மூதூரைச் சேர்ந்த எஸ். சுதாகரன் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான கைதுகள் மற்றும் பயங்கரவாத பொலிஸ் விசாரணைகளை நிறுத்துமாறு கோரியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் சிவஞானம் சிறீதரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

வடக்கில் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிரான அடக்கு முறைகள், அரசு தொடர்பான எதிர்மறையான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக சிவஞானம் சிறீதரன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வடக்கு கிழக்குத் தமிழ்த் தேசிய தளத்தில் செயற்படும் பல ஆர்வலர்களின் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளை முடக்கி அவர்களை அச்சுறுத்தும் வகையிலான விசாரணைகள் மற்றும் கைதுகள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை உங்கள் அரசாங்கத்தின் மீது எதிர்மறையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் தங்களது அவதானத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடுத்து வைத்திருப்பவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அவர்களின் விடுதலையை விரைவுபடுத்தவும், எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை அழிக்கும் விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.