ஜனாதிபதி தேர்தல்: இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது
.
ஜனாதிபதி தேர்தல்: இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது
ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு பிரஜைகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் புதுப்பித்துள்ளது.
இலங்கையில் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தலுக்கு முன்னரோ, தேர்தலின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்று அந்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சில சந்தர்ப்பங்களில், போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த்கூடும்.
இந்நிலையில், அமெரிக்க குடிமக்கள் அனைத்து கூட்டங்களையும் தவிர்க்க நினைவூட்டப்படுகிறார்கள்.
அமைதியான கூட்டங்கள் கூட, வன்முறையாக மாறக்கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு பயணிக்கும் குடிமக்கள் சுற்றுலா இடங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும்போது நிலைமையை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
22 தேர்தல் மாவட்டங்களில் 17 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு, இலங்கையில் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் 38 வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.