அனுர வெற்றிபெற்றால் காபந்து அரசாங்கம் எப்படி உருவாகும்?: தேசிய மக்கள் சக்தி விளக்கம்
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்ற அன்றைய தினமே நாடாளுமன்ற கலைக்கப்படும் என்பதுடன் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டு காபந்து அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி விவாதமொன்றில் கருத்து வெளியிட்ட சுனில் ஹந்துன்நெத்தி,
ஊழல் – மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சமகால நாடாளுமன்றத்துடன் காபந்து அரசாங்கமொன்றை நாம் கொண்டுசெல்ல மாட்டோம்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இந்த அமைச்சரவை இயங்காது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரையான காலப்பகுதியில் அமைச்சுகளுக்கு செயலாளர்களை நியமித்து அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியும்.
ஜனாதிபதி ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்ட பின்னர் இருக்கும் அமைச்சரவையை கலைப்பதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. இந்த திருடர்களுடன் நாம் ஒருநாள்கூட அரசாங்கமொன்றை கொண்டுசெல்ல மாட்டோம்.” என்றார்.
என்றாலும், இந்த விவாதத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அஜித் பெரேரா,
”நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அப்போது இருக்கும் அரசாங்கம்தான் பொதுத் தேர்தல்வரை காபந்து அரசாங்கமாக இயங்கும். அல்லது புதிய ஜனாதிபதி ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். இவர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும் சட்டத்தரணிகள் குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.