காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல்; பிரதமர் மோடியின் பிரச்சார நடவடிக்கை
.
காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் 18,25 மற்றும் ஒக்டோபர் முதலாம் திகதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. மேலும் நேற்று முன்தினம் முதல் நபராக ராகுல் காந்தி பிரசாரம் செய்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.இந்த நிலையில் பாரதிய ஜனதா நேற்று பிரசாரத்தை ஆரம்பித்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காஷ்மீர் சென்று பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இன்று சனிக்கிழமை அவர் ஜம்மு பிராந்தியத்தில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
இதேவேளை, பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் அவர் ஸ்ரீநகர், ஜம்மு உட்பட 03 இடங்களில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகுத்த 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அந்த மாநிலத்துக்கு அறிவித்தார்.
அவர் பிரசாரம் செய்வதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று பா.ஜ.க.தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.