யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி -11. ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital)
.
யாழ் போதனா வைத்தியசாலையின் தாபகர் : பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke) பேர்சிவல் அக்லண்ட் டைக் – இவரே யாழ் மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர் (01.10.1829-09.10.1867). அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில் அக்லண்ட் டைக் முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர், ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே. டைக் இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும் பழமரங்களின் கனிகளை சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும் பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர்.
தற்போது போதனா வைத்தியசாலையாக உருவாகியுள்ள யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தாபித்தவர் இவரே. 1850 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என்ற பெயரில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke) உதவி அரசாங்க அதிபராக இருந்த வில்லியம் துவைனம் (William Tywnam) ஆகியோரிடம் வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அரசாங்க அதிபர் டைக் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மூலமும் தனது நண்பர்களிடமும் நிதி சேகரித்து ரூபா பத்தாயிரம் வழங்கினார். அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் தனது வருமானத்தின் பெரும் பகுதியை யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் (F.N.S. Hospital) கட்டடிப் பணிகளுக்காகச் செலவிட்டார்.
கோப்பாயில் வசித்து வந்த அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக்கின் பூதவுடல் அவர் காலமான 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதியன்றே யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்த அரச அலுவலகங்கள் 4 – 5 தினங்கள் மூடப்பட்டன.
ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital- F.N.S. Hospital)
1850 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 27 ஆம் திகதி வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. வயல்வெளிகள் தோட்டங்கள் என்பனவற்றின் நடுவிலேயே ஆரம்பத்தில் வைத்தியசாலை அமைந்திருந்தது. இரண்டு விடுதிகளுடன் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. விடுதிகளுக்கு விக்ரோரியா மகாராணியின் பெயர் சூட்டப்பட்டது. (Victoria Jubilee Ward, Victoria Lying In Ward) பொது சிகிச்சை விடுதி, தோல் சிகிச்சை விடுதி என்பவற்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு உணவு வழங்குவதற்காக சமையற்காரர்களும் நியமிக்கப்பட்டனர். இங்கு இருபத்திநான்கு மணிநேரமும் சேவை வழங்கப்பட்டது. விடுதியில் தங்கிநின்று சிகிச்சை பெற்றவர்களுக்கு உடைகளும் வழங்கப்பட்டன.
வைத்தியசாலையை நிருவகிக்கும் பொறுப்பு அரசாங்க அதிபர் டைக்கிடமும் உதவி அரசாங்க அதிபர் துவைனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை ஆபத்துக்கு உதவும்; வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital) என அழைக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு மே மாதம் வைத்தியசாலைக்கு ஆறாயிரம் ரூபாநிதி உதவி வழங்கப்பட்டது.
14.12.1899 அன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 12.10.1905 வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திடம் கையளிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
1907 இல் வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அன்று முதல் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை என அழைக்கப்பட்டு வந்த வைத்தியசாலை யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை (Jaffna Civil Hospital) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1890 மே -யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மேலதிகமாக 2000ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மே11 -சுதேச வைத்தியர் பிரான்ஸ்சிஸ்பிள்ளை காலமானார்.
மே -எப்.ஆர்.சி.எஸ். பரீட்சைக்கு சென்ற 12 பேரில் இரு இலங்கையர்கள் சித்தியெய்தினர். அவர்கள்pல் டாக்டர் சின்னத்தம்பியும் அதி விசேட சித்தி பெற்றார்.
மே21 -சேர் ஆர்தர் எலிபாக் கலொக் இலங்கையின் கவர்னராகவும் படைகளின் தளபதியுமாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
யூன்2 -திரு இருதய சகோதர சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரு. டி. எஸ். பிலிப்ஸ் 'தன்னடக்கம்' பற்றி கட்டுரை படித்தார்.
யூன்5 -யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற செயலாளர் திரு. குரேயர் உட்சதை வளர்ச்சி நோயால் மரணமானார்.
யூலை -கொழும்பை சேர்ந்த வழக்கறிஞர் அல்விஸ் யாழ்ப்பாண தபால் அதிபராக நியமிக்கப்பட்டார்.
யூலை14 -மேதகு கவர்னர் சேர் ஆர்தர் கவ்லொக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
யூலை 23 -யாழ்ப்பாண நகர உடையார் பெஞ்சமின் ராசகாரியாரின் தந்தை அந்தோனிப்பிள்ளை ராசகாரியார், பிரபல வர்த்தகர் மரணமானார்.
யூலை13 -யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராக, நீண்ட காலமிருந்த வண. இ.பி. காஸ்ரிங்ஸ் மரணமானார்.
1890 ஆகஸ்ட் -பெரிய வெள்ளி விசேட பூசையின் போது கதிர்ப்பாத்திரத்தை மக்கள் பார்வைக்கு பீடத்தில் வைக்க யாழ்ப்பாண ஆயர் அனுமதியளித்தார்.
ஆகஸ்ட்11 -கர்தினால் ஜோன் கென்றி நியுமன் காலமானார். இவர் ஒக்ஸ்போர்ட் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராவார்.
செப்டம்பர்13 ரயில்வே ஆணையாளர்கள் கௌரவ சவுண்டர்ஸ், வில்லியம், ராமநாதன், கிறிஸ்ரி, பூயி சிமித் ஆகியோர் யாழ்ப்பாணம் வந்தார்.
செப்டம்பர்26 -இலங்கையின் இலட்சாதிபதி திரு சி.எச். டி சொய்சா காலமானார்.
1890 ஆகஸ்ட் 6 -யாழ்ப்பாணம் சின்னக்கடையில் கட்டிடம் இடிந்து விழுந்து சிலர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
ஒக்டோபர்18 -பி.ஜ.எஸ்.என் கொம்பனி முகவர் பொன்னையாபிள்ளை காலமானார்.
நவம்பர்25 காய்ந்த தானியங்களுக்கான வரிநீக்கம் கசட்டில் பிரசுரமானது.
டிசம்பர்19 பிரபல வைத்தியரும், கவிஞருமான, அளவெட்டியை சேர்ந்த வைத்தியர் அருளம்பலம் காலமானார்.
யாழ்ப்பாணம் வந்த ரெயில்வே ஆணையாளர்கள், யாழ்ப்பாண ரயில்வே பாதைக்கான நில அளவையைச் சிபாரிசு செய்து தமது அறிக்கையை வெளியிட்டனர்.
1891 சனவரி10 -யாழ்ப்பாண கத்தோலிக்க வாசிக சாலை நிதிக்காக தேங்காய் உடைக்கும் போட்டி நடந்தது. 40,000தேங்காய்கள் சேர்க்கப்பட்டன. நல்ல லாபம் கிடைத்தது.
பனைத்தும்புத் தொழிற்சாலை யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
சனவரி24 -யாழ்மாவட்ட பொறியியலாளர் பிரான்ஸ்சிஸ் முத்தையா ஆம்ஸ்ரோங் முதலியார் காலமானார்.
பெப்வரி கரையூரில் சின்னமுத்து நோய் பரவியது.
யாழ்ப்பாண மக்களுக்கு அரும் பெரும் சேவையாற்றிய அமெரிக்க மிசனைச் சேர்ந்த டாக்டர் மார்ஸ்ரன் அமெரிக்கா புறப்பட்டார்.
மார்ச் -ஒரு முத்துக்குளிப்பு நிலையம் 959,801ரூபாய் பணமீட்டியது. இங்கு கறுப்பு முத்துக்கள் இருந்தன.
1891 ஏப்ரல்கந்தப்பு தம்பிப்பிள்ளை முதலியார் இரத்தப் போக்கினால் வண்ணார்பண்ணையில் காலமானார்.
மே -காங்கேசன்துறை, வல்வட்டித்துறை, பருத்தித்துறை ஆகியவற்றை யாழ்ப்பாணத்துடன் இணைப்பதற்கு தந்திக்கம்பிகள் போடப்பட்டது.
யூன் -உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜோன் றூட் காலிக்கு மாற்றலாகிச் சென்றார். அவரின் இடத்திற்கு வான்கூற்றன் நியமிக்கப்பட்டார்.
யூன்5 -வல்வட்டித்துறை உதவி கலக்டர் மயில்வாகனம் காலமானார்.
யூன்19 -வைத்தியர் டாக்டர் ஹொவிங்ரன் மட்டக்களப்பில் காலமானார். (குறிப்பு 182)
யூலை -5000 ரூபா பெறுமதியான கருமுத்து கொல்பிட்டியை சேர்ந்த டொன் கரோலின் என்பவரால் விற்கப்பட்டது.
யூலை6 -விற்கப்பட்டது.
ஆகஸ்ட் -முல்லைத்தீவில் வெளிச்ச வீடு கட்டிமுடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் -ஆட்டிசியன் கிணறு (குழாய்கிணறு) தோண்டும் உபகரணம் மெற்றாசில் இருந்து கரைத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. வண பிதா லிட்டன் இந்த முயற்சியை மேற்கொண்டார். மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட இம் முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன.
செப்டம்பர்7 -ரூஸ்செயின்ற் எனப்டும் டச்சுப் பணக்காரர் யாழ்ப்பாணத்தில் மரணமானார். கொழும்பு புறக்கோட்டையில் இவர் தனது சொந்தப்பணத்தில் கிறிஸ்து கோலிலைக் கட்டினார்.
1891 நவம்பர்6 -இலங்கை நிராவிக்கப்பல் கம்பனிக்கு இங்கிலாந்தில் இருந்து புதிய நீராவிக்கப்பல் 'லேடி ஹலொக்' கொழும்பு வந்து சேர்ந்தது.
டிசம்பர்28 -வண்ணார்பண்ணை சிவன்கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு 30,000ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டன.
சென் ஜோன் குரு மடம் சுண்டிக்குளியில் மூடப்பட்டு அங்கு சென் ஜோன்ஸ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
டிசம்பர்28 -சென் பற்றிக்ஸ் கல்லூரி மண்டபத்தில் இசைநிகழ்ச்சியுடன் இரண்டு பெரிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
1892 சனவரி1 உச்சநீதிமன்ற சுற்று நிருபம் வெளியிடல் நிறுத்தப்பட்டது.
வடமத்திய மாகாண நீர்ப்பாசன இஞ்சினியராக கனகசூரியன் 300ரூபா சம்பளத்தில் நியமிக்கப்பட்டார். திரு. ரெங்கநாதன் மாவட்ட பொது மராமத்து இலாகா இஞ்சினியராக நியமிக்கப்பட்டார்.
சனவரி 15 -கிளாரன்ஸ், அவாண்டேல் ஆகிய இடங்களின் மாட்சிமை தங்கிய பிரபு காலமானார். அனைத்து அரச காரியாலயங்களும் மூடப்பட்டு, தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடும்படி கவர்னர் கட்டளையிட்டார்.
சுனவரி -யேசுவின் சபையைச் சேர்ந்த வண பிதா முல்லர் தனது உடல் நலம் கருதி, ஓய்வு எடுப்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார். தொழுநோயால் பீடிக்கப்பட்ட 40 பேரை மங்களுரில் வைத்து இவர் பராமரிக்கிறார்.
சனவரி -கொலரா மன்னாரில் மீண்டும் பரவத்தொடங்கிற்று.
வெஸ் மினிஸ்ரரின் அதி மேற்றிராணியாரும், இங்கிலாந்தின் பிரதம குருவுமான கர்த்தினால் மானிங்ஸ் காலமானார். இவர் மிகவும் பிரபல்யமானவர்.
சனவரி19 - கொழும்பில் சென் ஜோசப் கல்லூரியை நிறுவுவதற்காக கொழும்பிற்கு பங்குத் தந்தையாக மாற்றலாகி, வண பிதா லைட்டன் கொழும்பிற்கு வந்தார்.
சனவரி - பொதுக்கல்வி இலாகாவில் கல்வி நெறியாளராக இருந்த, காலம் சென்ற திரு அல்விசின் இடத்திற்கு, வடமாகாண பரிசோதகர் ஆர்தர் பொன் லீம் புறுகன் நியமிக்கப்பட்டார். இவரின் இடத்திற்கு, தலைமைச் செயலக பிரதம லிகிதர் பொன் குய்லன்பேர்க் நியமிக்கப்பட்டார்.
பெப்ரவரி 19 -வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளின் புதிய பரிசோதகர் குய்லன் பேர்க் யாழ்ப்பாணம் வந்தார். குறிப்பு 236
பெப்ரவரி29 மனுவேல்பிள்ளை ராசகாரியார் கட்டிய இரண்டு அடுக்குவீட்டை குருமுதல்வர் வண பிதா மொறுவா ஆசிர்வதித்து வைத்தார்.
மார்ச் 7 -சேர் வில்லியம் கிறகறி முன்னாள் இலங்கை கவர்னர் மரணமானார்.
மார்ச் 18 -வல்வெட்டித்துறை பிரபல வர்த்தகர் திரு மணி பெரியதம்பிக்கு சொந்தமான கப்பல் அன்னலட்சுமி மண்டைதீவின் கரையருகே கவிழ்ந்தது.
மார்ச் 19 -திருமதி மக்டலின் பஸ்ரியாம்பிள்ளை மரணமானார். இவர் அரசனின் ஆலோசகர் சவிரிமுத்து முதலியாரின் மகளும், பஸ்ரியாம்பிள்ளை முதலியாரின் மனைவியும் ஆவார். (குறிப்பு 184)
மார்ச் 20 -இந்து உயர் பாடசாலையின் தலைவர் நெவின்ஸ் செல்லத்துரைப்பிள்ளை, விக்டோரியா வாசிகசாலையில், 'பண்பால் வரும் முடிவு' என்னும் தலைப்பில் ஓர் உரை நிகழ்த்தினார்.
1892 ஏப்ரல் 1 -வழக்கறிஞர் பஸரியாம்பிள்ளையின் மகன் ஜேம்ஸ் பஸ்ரியாம்பிள்ளை மரணமானார்
பழைய டச்சுக்கோவிலை அரசு 6000 ரூபா பணம் கொடுத்து வாங்கிற்று. ரூபா 5260 செலவில் காங்கேசன்துறை வெளிச்சவீடு கட்டிமுடிக்கப்பட்டது. இதன் உயரம் 70 அடி. இது எண்கோண வடிவில், வெளியே இரும்பு ஏணி வைத்து கட்டப்பட்டது.
கடற்கரை வீதியில், சரக்கு இறக்குமிடத்திற்கு இடது புறமாக, பாசையூரை நோக்கி 6 சிமெந்துக் கதிரைகள் நிலத்துடன் இணைத்துக் கட்டப்பட்டன.
யூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து நெல்வரி நிறுத்தப்படும் என அரச வர்த்தமானியில் உத்தியோக அறிவிப்பு வந்தது.
மே18 -திரு ஜே கோமர் வன்னியசிங்கம் வண பிதா போர்லான்டரிடம் ஞானஸ்நானம் பெற்றார். திரு திருமதி போல் முதலியார் இவர்களின் ஞானப்பெற்றோர் ஆவர்.
யூன் 13 -'ஆபத்தில் உதவும் நண்பர்' யாழ்ப்பாணக்கிளை கமிட்டியின் பொதுக்கூட்டத்தில் டாக்டர் கிறகறியாரை வந்து செல்லும் சத்திரசிகிச்சை நிபுணராக நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
யூலை -சிக்காக்கோவில் நடந்த கண்காட்சியில், இலங்கைக்கான காட்சிப்பீடத்தை அலங்கரிப்பதற்கு விலை மதிப்பான கருங்காலி போன்ற 200 மரங்களை இலங்கை காட்டு இலாகா அனுப்பிவைத்தது.
யூலை -நெடுங்கேணியில் ஓர் மருந்துச்சாலை திறந்துவைக்கப்பட்டது. சிறிய நகரங்களுக்கான சுகாதாரச் சட்டம் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2 -கொழும்பின் முதல் அதிமேற்றிராணியார் ஆயர் பொன் ஜோன் காலமானார். தனது எழுத்துக்களால் பெரும் எழுச்சியை ஏற்;படுத்திய இவர் யாழ்ப்பாணத்து கத்தோலிக்க மக்களின் மேன்மைக்காக பல மத ஸ்தாபனங்களையும் கல்விக்கூடங்களையும் உருவாக்கினார். (குறிப்பு 180, 440)
ஆகஸ்ட் -ஒரு பெட்டிக்குள் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான, 10 சத நாணயக் குற்றிகள் கொண்ட, 70 பெட்டிகள் கொழும்பை வந்தடைந்தன.
ஆகஸ்ட் 26 -வட்டுக்கோட்டை அமெரிக்க மிசனில் நீண்ட காலமாக சேவையாற்றிய டபிள்யூ கோல்லான்ட் காலமானார். (குறிப்பு 186)
செப்டம்பர்18 திரு டாக்டர் சப்மான் உடுவிலில் காலமானார். (குறிப்பு 187)
ஒக்டோபர் -இந்திய 2அணா நாணயம் நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக வெள்ளி நாணயம் புழக்கத்தில் விடப்பட்டது.
கிளாலியில் உள்ள சென் ஜேம்ஸ் தேவாலயத்தை முற்றாக புனர்நிர்மாணம் செய்யும் பொறுப்பை வழக்கறிஞர் ஜேம்ஸ் நிக்கலாஸ் ஏற்றுக்கொண்டார்.
வழக்கறிஞர் பரீட்சையில் கதிரவேற்பிள்ளை, திசவீரசிங்கியும் தம்பையாவும் சித்தியெய்தினர்.
யாழ்ப்பாணத்தில் தொண்டர் அமைப்புக்கள் யாழ்ப்பாண மாவட்ட இஞ்சினியர் பெலாமியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒக்டோபர்4 -யாழ்ப்பாணத்தில் பிலிப் தம்பர் காலமானார்.
நவம்பர் -அடிப்படை உயிர்க் காப்புறுதி ஸதாபனத்தின் ஏஜன்ட் ஆக திரு செரூபிம் நியமிக்கப்பட்டார். இவர் பி.ஐ.எஸ்.என் கம்பனியின் ஏஜென்டும் கூட.
டிசம்பர் 14 -கொழும்பு ஆயர் டாக்டர் மெலிசான் கொழும்பிலிருந்து ஐரோப்பா சென்றார்.
டிசம்பர் 13 -தென்னை பெருந்தோட்டத் துரையான பிட்டர்சன்ஸ் மனைவி காலமானார்.
டிசம்பர்16 -பரப்பாங்கண்டல் தேவாலய வழக்கில் வண பிதா சந்திர சேகராவின் மனு சார்பான தீர்வை மன்னார் மாவட்ட நீதிபதி ஜக்சன் வழங்கினார்.
1893 சனவரி 14 யாழ்ப்பாணக் கச்சேரியின் தலைமை முதலியார் திரு போல் முதலியார் காலமானார்.
சனவரி15 -மன்னார் அதிகாரி கஸ்பார்பிள்ளை முதலியார் காலமானார்.
சனவரி22 -முன்னணி வழக்கறிஞர் காசிப்பிள்ளையின் மனைவி காலமானார். இவர் தனிப்பட்ட தர்ம ஸ்தாபனங்களை நடாத்தி வந்தார்.
சனவரி24 -கப்டன் மக்நீல், திரு.ஜெரால்ட் பிறவுண் ஆகியோருடன்,
கவர்னர் ஆர்தர் கவ்லொக் யாழ்ப்பாணம் வந்தார். சங்க கட்டிடத்திற்கு முன்னால:; போடப்பட்ட பந்தலில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அரச வழக்கறிஞர் தம்பு வரவேற்புரை நிகழ்த்தினார்.
சனவரி -நெல்வரி நிறுத்தப்பட்டது.
பெப்ரவரி1 - பொன். ராமநாதனின் சகோதரர் பொன் குமாரசாமி, சட்ட சபையில் தமிழ் மக்கள் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். (குறிப்பு 277)
பெப்ரவரி -யாழ்ப்பாணத்தில் இருந்து ஆனையிறவு வரை குதிரை மூலம் நடாத்தப்பட்ட இரவுத் தபால் வண்டிச் சேவை கனகராயன்குளம் வரை (68 மைல்) நீடிக்கப்பட்டது.
பெப்ரவரி 18வண பிதா றூ. (அ.உ.நி) காலமானார். 1884ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த இவர் ஆயர் மெலிசானால் 1885ம் ஆண்டு குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். திருகோணமலை மட்டக்களப்பு பருத்தித்துறை ஆகிய இடங்களில் பங்கு குருவானவராகவும், சிறிதுகாலம் சூசையப்பர் அனாதை விடுதி இயக்குனராகவும் .இவர் இருந்தார்.
பெப்ரவரி -மன்னார் மேற்கு உடையார் வல்லிபுரம் மன்னாரின் தற்காலிக அதிகாரி ஆக நியமிக்கப்பட்டார்.
பெப்ரவரி 19 -யாழ்ப்பாண பேராலயத்தில் பாப்பாண்டவரின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
பெப்ரவரி 25 -யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில்வே பாதைக்கான நில அளவுகள் முற்றுப்பெற்றன. இவ் வேலையை திரு மெயின் மேற்பார்வை செய்தார்.
மார்ச் 5 -பாப்பாண்டவரின் சுற்று நிருபம் ஊடாக, ஆயர் அன்ரூ மெலிசான் கொழும்பு பேராலாய திருச்சபை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
மார்ச் -பொது மராமத்து இலாகா மேற்பார்வையாளர் திரு அந்தோனிப்பிள்ளை மன்னாரில் காலமானார். இவர் யாழ்ப்பாணக் குருமட ஆசிரியர் திரு சவிரிமுத்துவின் சகோதரர் ஆவார்.
மார்ச் 8 -500 இறாத்தல் கொப்பரா 50 ரூபாவிற்கு விற்பனையானது.
ஏப்ரல் -யாழ்ப்பாணத்திற்கான 1893-94க்கான சாராய குத்தகையை டொன் கென்றிக் அப்புகாமி 47000 ரூபாவுக்கு வாங்கிக் கொண்டார்.
மே1யாழ்ப்பாண குருமுதல்வராக நீண்டகாலம் இருந்த வண பிதா புலிக்கானி கொழும்பில் காலமானார்.
மே -'சிலோன் றிவியு' பத்திரிகை வெளிவரத்தொடங்கியது.
மே 17 -'வெட்டுக்காடு' தென்னை பெருந்தோட்ட செய்கைக்குப் புதிய பிரபலமான இடமாயிற்று.
மே17 -யாழ்ப்பாண பொலிஸ் மாஜிஸ்ரேட் கொன்ஸ்ரன்ரைன் செல்வி பற்றி எம்ஸ்லியை கொள்ளுப்பிட்டியில் திருமணம் செய்து கொண்டார்.
1893 மே 22 -'வாழ்க்கையின் இலக்குகள்' என்ற தலைப்பில் கோமர் வன்னியசிங்கம் வழக்கறிஞர், யேசுவின் திரு இருதய சகோதர அமைப்பின் பொதுக்கூட்டத்தில் ஓர் உரை நிகழ்த்தினார்.
ஒரியன்ரல் வங்கி யாழ்ப்பாணக்கிளையின் மேல்மாடிக் கட்டிடத்தை திரு. அலெக்ஸ் ரூஸ்செயின்ற் விற்றார். அதை 14000ரூபா கொடுத்து மெல்வில் கெட்ஸ் என்னும் பெருந்தோட்டத்துரை வாங்கினார்.
யூன் 6 -காலாவதியான ஒரியன்ரல் பாங்க் கோப்பரேசன் உள்ளுர் முகவர் சாள்ஸ் மொரிசன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்றார். யாழ்ப்பாணத்திலிருந்த போது வடமாகாண மக்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.
யூலை - யாழ்ப்பாண ரயில்வே பாதைக்கான நில அளவீடு ஆனையிறவை அடைந்தது. மொத்தம் 46 மைல்கள்.
யூலை -ஆனையிறவிலிருந்து அனுராதபுரம் வரை தபால் சேவையில் ஈடுபட்ட அரச தபால் சேவையின் தொடர் வண்டில் மாதிரி, சிக்காக்கோவில் நடந்த சர்வதேச கண்காட்சியில் இலங்கைக்கான நிலையத்தில் வைக்கப்பட்டது. இது யாழ்ப்பாண- அநுராதபுர மெயில் வண்டி ஒப்பந்தக்காரர் ஆசைப்பிள்ளையால் உருவாக்கப்பட்டு, தபால் அதிபர் நாயகம் திரு. ஸ்கின்னர் அவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது.
யூலை 19 -போர்த்துக்கேய ரூபாய்ப் பணம் மகாராணியால் சபையில் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைய, இந்தியாவில் புழக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 4 -வண கென்றி யூலான் ஆண்டகை, யாழ்ப்பாண ஆயராக, கொழும்பு அதி மேற்றிராணியாராக நியமிக்கப்பட்ட டாக்டர் மெலிசானின் இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
ஆக்ட்ஸ்9 -யாழ் மாவட்ட நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் தியோகுப்பிள்ளை மரணமானார். (குறிப்பு 190)
ஆகஸ்ட்24 -டாக்டர் கென்றி யூலான் ஆண்டகை யாழ் ஆயராக நியமிக்கப்பட்ட திருச்சடங்கு யாழ் தேவாலயத்தில் நடந்தது.
செப்டம்பர்3 -பவுண் அடைவு பிடிப்பவர்கள் குறித்த சட்டமூலம் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
செப் -உப. கலெக்டர் க. அருணாச்சலம் வண்ணார்பண்ணையில் மரணமானார். (குறிப்பு 191)
செப்டம்பர்9 -முசலி, நானாட்டான் ஆகிய இடங்களின் அதிகாரி சீயாம்பிஸ்பிள்ளை முதலியார் மன்னாரில் காலமானார். (குறிப்பு 192)
செப்11 -ஊர்காவற்துறை சிறுவர் நீதிமன்ற பிரதம லிகிதர் விசுவநாதபிள்ளை காலமானார்.
செப:டம்பர்29 -வெஸ்லியன் மிசனரி போதகர் வண. ஜே. நியுகாம் பருத்தித்துறையில் ஓர் விபத்தில் இறந்து போனார்.
ஒக்டோபர் -பளை தபாலதிபர், திரு. ஜோன் ரொட்ரிகோ தபால் இலாகாவில் இருந்து வெளியேறி தென்னை பெருந்தோட்ட செய்கையில் ஈடுபட்டார்.
டிசம்பர்15 -டாக்டர் யூலான் ஆண்டகை மேற்றிராணியாக யாழ்ப்பாணம் வந்தார்.
"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -