சம்மாந்துறையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 06 மாணவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
.
சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 06 மாணவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (26) மாலை காரைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள மத்ரஷா ஒன்றிலிருந்து சம்மாந்துறைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டரானது வெள்ளத்தால் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது, டிராக்டர் வாகனத்தின் சாரதியும் அவரது உதவியாளரும் மற்றும் 11 மாணவர்களும் பயணித்துள்ளனர்.
அவர்களில் 05 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போன 06 மாணவர்களையும், டிராக்டர் வாகனத்தின் சாரதி மற்றும் அவரது உதவியாளரையும் தேடும் பணிகளில் பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக காரைத்தீவு பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
காணாமல் போன மாணவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.