இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் செய்தித் தொகுப்புகள்!
வடக்கு கிழக்கில் போரின் வடுக்கள் முதல் கொழும்பின் அரசியல் பாதுகாப்புப் பிரச்சினைகள்வரை பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
1. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் நேற்று (15) ஈடுபட்டிருந்தன. இந்தத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போட்டியிட்டு வடமாகாணத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது .இந்தக் கலந்துரையாடலுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமை தாங்கியிருந்தார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் M.A சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் சமூகமளித்திருக்கவில்லை .
2.முகாமாலை கண்ணிவெடி அகற்றிய பகுதியில் 40 மோட்டார் குண்டுகள் மீட்பு! கிளிநொச்சி, முகாமாலை பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்ட காணியிலிருந்து 40 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணியைப் பண்படுத்திய உரிமையாளர் இதனைக் கண்டறிந்து தகவல் வழங்கியதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினர் நீதிமன்ற உத்தரவுடன் அவற்றை மீட்டனர். போரின் வடுக்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நினைவூட்டுகிறது.
3. நீதிமன்ற உத்தரவால் கோப்பாய் காவல் நிலையம் தற்காலிகமாக அகற்றம்! தனியாருக்குச் சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த கோப்பாய் காவல் நிலையம், யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நேற்று அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. ஏழு வீடுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் முறைப்பாடுகளை யாழ்ப்பாணம் காவல் நிலையம் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. மன்னார் பகுதியில் இந்திய மீன்பிடிப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து, மீனவர் சங்கங்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தன. தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகளால் தமது வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் புதிய அரசு உடனடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றச் செய்திகள்
5. BMICH-ல் இருந்து காவல்துறை பாதுகாப்பு வாபஸ்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கடும் அதிருப்தி! கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இருந்து, எவ்வித முன்னறிவிப்புமின்றி காவல்துறைப் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டதாக அதன் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க அதிருப்தி தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடத்தில், இத்தகைய பொறுப்பற்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கண்டித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் கொள்கை முடிவுகள்
6. இலங்கைக்கு ஆண்டுக்கு $1 பில்லியன் இழப்பை ஏற்படுத்தும் சைபர் குற்றங்கள்: ஆசிய அபிவிருத்தி வங்கி அதிர்ச்சித் தகவல்! இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரம் விரிவடைந்து வரும் நிலையில், சைபர் குற்றங்களால் நாட்டுக்கு ஆண்டுதோறும் 450 மில்லியன் முதல் 1 பில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மதிப்பிட்டுள்ளது. வலுவான சைபர் பாதுகாப்பு மற்றும் தேசிய அளவிலான விழிப்புணர்வு அவசியம் என வங்கி வலியுறுத்தியுள்ளது.
7. பொருளாதார மீட்சியைத் தாண்டிய கட்டமைப்பு வளர்ச்சி அவசியம்: IPS நிறுவனம் அறிவுறுத்தல் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்தாலும், இது ஒரு தற்காலிக மீட்சியாக இல்லாமல், ஆழமான உற்பத்தி மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பு ரீதியான வளர்ச்சியாக மாற்றப்பட வேண்டும் எனக் கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் (IPS) தனது புதிய அறிக்கையில் கூறியுள்ளது.
சமூகம் மற்றும் சுகாதாரம்
8. LGBTQI கருப்பொருளை ஊக்குவித்ததாகக் குற்றச்சாட்டு: 'வத்தவளை டீ' குறும்படம் வாபஸ்! 'வத்தவளை டீ' நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட "Him, Her and Them" என்ற குறும்படம், LGBTQI கருப்பொருள்களை ஊக்குவிப்பதாகச் சமூக வலைதளங்களில் எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, அதனைத் திரும்பப் பெற்றுள்ளது. படம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
9. அழகுக்கலை சேவைகள்: சேவை வழங்குநர்களின் தகுதிகளைச் சரிபார்க்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல் தலைமுடிக்கு சாயம் பூசுவது முதல் சிக்கலான பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைகள் வரை அழகுக்கலை சேவைகள் பெருகிவிட்ட நிலையில், அச்சேவைகளை வழங்கும் நிபுணர்களின் தகுதிகளைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்குச் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10. X-Press Pearl கப்பல் விபத்து: நட்டஈடு வழங்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம்! பலத்த சேதத்தை ஏற்படுத்திய MV X-Press Pearl கப்பல் விபத்து தொடர்பான நட்டஈடுகளைக் கையாளும் சுயாதீன ஆணைக்குழுவிற்கான நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடல்சார் சூழல், உயிரியல், சட்டம் மற்றும் மீன்பிடித் துறை வல்லுநர்கள் இதில் அடங்குவர்.
11. இலங்கையில் 4 இலட்சத்தை எட்டவுள்ள தங்க விலை!நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது.கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் விலை 390,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது நேற்று 380,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.
அதேநேரம் 22 கரட் தங்கத்தின் விலை இன்று 360,800 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது நேற்று 351,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.
சிவா சின்னப்பொடி


