மார்க் கார்ணி வெற்றி: ட்றூடோவின் பாவ மன்னிப்பு
லிபரல் கட்சித் தலைவர் தேர்வில் 150,000 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

நேற்று கனடிய தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் 85.9% வாக்குகளைப் பெற்று மார்க் கார்ணி தெரிவாகியிருக்கிறார். அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாயினும் இப்படியொரு பாரிய வெற்றியாக அமையுமென்று வரும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னாள் உதவிப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு 8% வாக்குகளை அளித்து மானபங்கப்படுத்திவிட்டது கட்சி.
ஃபிறீலாண்டினது வீழ்ச்சிக்கு அவரே தான் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜஸ்டின் ட்றூடோவின் சரிந்துவந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தான் முன்னே வந்துவிடலாம் என அவர் போட்டிருந்த தப்புக்கணக்குக்கு கிடைத்த விடை அது. ட்றூடோவின் மகிமையைப் பாவித்து அள்ளுப்பட்டு வந்த, ட்றூடோவால் பலன் பெற்ற, பல லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது படகு கவிழப்போகிறது எனத் தெரிந்ததும் அவரைத் தனியே விட்டுப் பாய முயன்றார்கள். அதில் முன்னணியில் இருந்தவர் ஃபிறீலாண்ட். அவரோடு தொடர்ந்தும் துணை நின்றவர்கள் மெலனி ஜோலி மற்றும் டொமினிக் லெப்ளாங்க் போன்றவர்கள். பின்னணியிலிருந்து அவருக்கு ஆதரவு தந்தவர் ட்றூடோவின் நீண்டகால ஆலோசகரான மார்க் கார்ணி. ட்றூடோவுக்கு பழிவாங்கும் குணம் இருப்பதென்பது இதற்கு முன்னரும் பல சம்பவங்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
நிதியமைச்சராக இருந்த ஃபிறீலாண்ட் நிதி, பொருளாதார விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவரல்ல. அவர் ஒரு ஊடகவியலாளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர். லிபரல் கட்சியின் பல பிரபலமற்ற கொள்கைகளில் ஒன்றான ‘கரி வரி’ யின் பாரம் முழுவதையும் அவரே தாங்கவேண்டி ஏற்பட்டது. இது தொடர்பாக ட்றூடோவுடன் உரசிக்கொண்டதன் விளைவு அதல பாதாளத்துக்கு விழுத்தியிருக்கிறது. கார்ணியை உச்சிக்குக் கொண்டு வருவதன் மூலம் தான் இழந்த பள பளப்பை மீளப்பெற்றுவிடமுடியும் என்ற ட்றூடோவின் கணிப்பு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு ட்றம்பிற்கே அவர் நன்றி சொல்ல வேண்டும்.
தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட நால்வரில் ட்றம்ப் போன்ற ஒரு கொடுங்கோலரை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை மார்க் கார்ணிக்கே உண்டு என வாக்காளப் பெருமக்கள் உணர்ந்திருக்க வாய்ப்புண்டு, அத்தோடு establishment க்கும் அவரே தான் தெரிவு. ட்றம்பிற்கும் ஐரோப்பாவுக்குமிடையேயான முறுகல் நிலையில் பலமான கனடா ஐரோப்பாவுக்கு அவசியம். எனவே அவரது தேர்தல் செலவுகளுக்கென இந்த establishment அள்ளிக் கொடுத்திருந்தமையையும் கவனிக்க வேண்டும். கடந்த வாரங்களில் ஐரோப்பாவில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ட்றூடோவுக்கு வழங்கப்பட்ட மரியாதை ட்றம்பிற்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படவேண்டும். எனவே கார்ணியின் வெற்றி ட்றூடோவின் வெற்றியேதான். கார்ணியின் வருகையால் லிபரல் கட்சி இன்னுமொரு தவணை ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ட்றூடோவின் படகிலிருந்து பாய்ந்து ஓடியவர்கள் மிதப்பார்களோ தெரியாது.
இதில் அதிர்ஷ்டமில்லாதவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிய்ர் பொய்லியேவ் தான். பாவம். எப்படித்தான் உருமாற்றங்களைச் செய்தாலென்ன இளம் வாக்காளரை அவரால் கவரமுடியாமலிருக்கிறது. ட்றூடோவின் கரி வரியை வைத்துக்கொண்டு கரை சேரலாம் என அவரும் அவரது ஆலோசக சேனையும் நினைத்திருக்கலாம். கரி வரியை விட மக்களுக்கு ட்றம்ப் என்ற கொடுங்கோலரே முக்கியம் என்பதை டக் ஃபோர்ட் போன்ற கன்சர்வேட்டிவ் காரர் சிக்கெனப் பிடித்த விவேகம் பொய்லியேவுக்கும் அவரது சேனைக்கும் புலப்படவில்லை. கார்ணியின் வெற்றிக்குப் பிறகு கரி வரியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஓட முயற்சிக்கிறார் பொய்லியேவ். ஆனால் “நான் கரி வரியை இல்லாமற் செய்யப் போகிறேன்” என வந்ததும் வராததுமாக கார்ணி அறிவித்ததன் மூலம் முதலாவது பந்திலேயே அவுட்டாக்கி விட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதி நடைமுறையின்படி எதிர்வரும் அக்டோபர் 20 (2025) இல் 45 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் ஏறிவரும் லிபரல் செல்வாக்கில் மிதக்கும் கார்ணி மிக விரைவில் தேர்தலை நடத்துமாறு ஆளுனருக்குப் பரிந்துரைக்கலாம். தெற்கில் அடித்துவரும் சூறாவளி எப்படியான விளைவுகளைக் கொண்டுவருமோ தெரியாது. ஆனால் கனடியர்களின் தேசிய உணர்வை உச்சத்துக்குக் கொண்டுபோயிருக்கிறது. ட்றூடோவின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டன. அடுத்த தேர்தலில் கார்ணி ஆட்சியமைப்பாராகில் அது ட்ற்டோவுக்கான வெற்றி.
ட்றம்ப் ஒரு சுத்துமாத்து வண்டில் வியாபாரி. நேர்மை என்பதை அறியாதவர். ஏமாற்று வேலைகளால் தான் கட்டியெழுப்பிய வணிக சாம்ராஜ்யத்தைப்போல நாட்டையும் கட்டி எழுப்பலாம் எனக் கனவு காணும் ஒருவர். இறக்குமதித் தீர்வை மூலம் கனடிய பொருளாதாரத்தை முடக்கி அதை தனது 51 ஆவது மானிலமாக்கிவிடலாமெனக் கனவு காண்பவர். கார்ணியின் வெற்றிப் பேச்சின்போது “ஹொக்கியைப் போலவே வர்த்தகத்திலும் கனடா அமெரிக்காவை வென்று விடும்” என்பதை அமெரிக்கர்களுக்கு விடும் எச்சரிக்கை போல் ட்றம்பிற்கு விடுத்திருக்கிறார். ஆனால் பொய்லியேவோ இன்னும் கரி வரியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார். எனவே அடுத்தடுத்த வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடப்படும் என எதிர்பார்க்கலாம்.
லிபரல் கட்சித் தலைவர் தேர்வில் 150,000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வெற்றி விழாவில் 1,600 பேர் பங்குபற்றி ட்றூடோவுக்கு பிரியாவிடை வழங்கியிருக்கிறார்கள். அவர் 2015 இல் அவர் வந்தபோது கர்ச்சித்த அதே மிடுக்கோடுதான் விடைபெற்றும் போகிறார். அவரது பல progressive கொள்கைகள் தோல்வி கண்டிருக்கின்றன. அதற்கு அவர் மட்டும் காரணமில்லை. பல மர்ம விசைகளின் நூற்பொம்மைகளாக இருக்காவிட்டால் ஆசனம் பறிபோய்விடும். கார்ணிக்கும் அதே நிலைமை தான்.
கார்ணி பிறப்பால் ஒரு பிரித்தானியர். பிரித்தானிய, கனடிய, ஐரிஷ் குடியுரிமைகளுக்குச் சொந்தக்காரர். அவரை முன்தள்ளியமைக்கு ஐரோப்பிய சக்திகளுக்கு ஒரு பங்குண்டு. ட்றம்பின் ரஷ்ய சார்பு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் வரை கார்ணி போன்றோரே அவர்களுக்குத் தேவை, பொய்லியேவ் அல்ல. வருட ஆரம்பத்தில் 20 புள்ளிகள் பின்னால் இருந்த லிபரல் கட்சி இப்போது கன்சர்வேட்டிவ் கட்சியை விட மேலே போகும் நிலையில் இருக்கிறது. அதிர்ச்சி தரும் மாற்றம்.