மன்னார் வளைகுடா பகுதி 'ஹைட்ரோ கார்பன் திட்டம்' உலகத்திற்கே பேராபத்து - எச்சரிக்கும் சூழலியலாளர்!
நெய்தல் மக்கள் கட்சி தலைவர் மீனவர் பாரதி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு இது குறித்து ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.

தென்தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் இத்தனை ஆண்டுகளாக நாம் பாதுகாத்து இருக்கக் கூடிய பெரும் வளங்கள் வீணாகி விடும் என்று சூழலியலாளர் தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், ஆழமான கடற்பகுதியில் 95 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதனை ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளுக்கான ஏலம் கடந்த பிப்ரவரி 11 அன்று தொடங்கியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இது குறித்து நெய்தல் மக்கள் கட்சி தலைவர் மீனவர் பாரதி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.
நெய்தல் மக்கள் கட்சி தலைவர் பாரதி கூறியதாவது;
"இந்தியாவிலேயே கடல் மீன் பிடி தொழிலில் தமிழ்நாடு முக்கியமான மாநிலமாக இருக்கிறது. 14 கடலோர மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் அண்மை கடலில் இருந்து ஆழ்கடல் வரையில் மீன் பிடி தொழில் செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் அதிகமாக மீன் பிடி தொழில் செய்வார்கள். எங்கெல்லாம் மீன்வளம் இருக்கிறது? எங்கெல்லாம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்? என்று கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தில் கொண்டு வர வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தோம். அப்போது தான் இது போன்ற திட்டங்களை தொடக்கத்திலேயே தடுக்க முடியும். எதை செய்ய வேண்டுமோ? அதை செய்யாமல் மத்திய அரசும், மாநில அரசும் மீனவர்களின் உரிமைகளை புறக்கணிக்கின்றன.
கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
ஒருபுறம் கடலில் மீன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்று 45 நாட்கள் தடை செய்ததை தற்போது 61 நாட்களாக அதிகரித்து இருக்கின்றனர். மற்றொருபுறம் மீனவர்களை மீன்பிடி தொழிலை செய்யாதீர்கள் என்று நிறுத்தி வைத்து விட்டு இந்த மாதிரியான திட்டங்களை கொண்டு வர பார்க்கிறார்கள். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி தனுஷ்கோடி வரைக்கும் அண்மை கடலில் இருந்து ஆழ்கடல் வரைக்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்தனர். அந்த திட்டத்திற்கே மீனவ மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதைப் பற்றி துளியும் எண்ணாமல் மீண்டும் அதே போல திட்டங்களை கொண்டு வர பார்க்கிறார்கள். இந்த திட்டம் கடல் வாழ் உயிரினங்களுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனை ஒட்டு மொத்த மீனவர்களும் எதிர்க்கிறோம்" என்றார்.
பூவுலகின் நண்பர்கள் சூழலியல் இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு கூறியதாவது;
"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொருத்தவரையில் தமிழ்நாட்டில் அதிக அளவு எதிர்ப்பு இருக்கிறது. இதற்கு முன் இருந்த காலங்களில் காவிரி டெல்டா படுகைகளில் காவிரியின் பகுதிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டது. அதனால் அங்கே இருக்கக் கூடிய விவசாயிகள் மற்றும் விளை நிலங்கள் மிகவும் பாதிப்படைந்தன. இதனால் அங்கே இருக்கக் கூடிய எண்ணெய் கிணறுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் விளைவாக மத்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அப்போது இருந்த அதிமுக அரசு ஹைட்ரோ கார்பனை எடுக்காமல் இருப்பதற்கான ஒரு சிறப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட வேண்டிய வேளாண் பகுதியாக அந்த அரசு அறிவித்தது. தற்போது இருக்கக்கூடிய திமுக அரசும் கூட அதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் எங்கேயுமே ஹைட்ரோ கார்பன் எடுக்க முடியாது என்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஏல அறிவிப்பு.
தற்போது கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஒரு ஏலத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 'ஓபன் ஏக்கரேஜ் லைசன்ஸ் பாலிசி' என்ற ஒரு ஏலம் கொள்கையின் அடிப்படையில், மத்திய அரசு பத்தாவது ஏல அறிவிப்பை விடுத்து இருக்கிறது. இந்த ஏலத்தில் தென் தமிழகத்தில் இருக்கக் கூடிய 9,990 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்தை ஏலமாக அறிவித்திருக்கின்றனர்.
தென் தமிழகம் என்று சொல்லும் போது தூத்துக்குடி, கன்னியாகுமரி, தனுஷ்கோடி வரையிலான பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்தை முடிவெடுத்து இருக்கின்றனர். இந்தப் பகுதி சூழலியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். அங்கே தான் மன்னார் வளைகுடா இருக்கிறது. 21 பாதுகாக்கப்பட்ட தீவுகள் உள்ளன.
மீனவர்கள் செல்லவே முடியாத நிலை ஏற்படும்
உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியை பாதுகாப்பதற்கு பல இடங்களில் இருந்தும் நிதி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கே தான் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. குறிப்பாக கடல் பசு மற்றும் பவளப்பாறைகள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. 45-க்கும் மேற்பட்ட பாலூட்டி வகைகள் இருக்கின்றன. இந்த மாதிரியான திட்டங்கள் இப்பகுதியில் வந்தால் நிச்சயமாக மிகப் பெரிய ஆபத்தாக இருக்கும். இத்தனை ஆண்டுகளாக நாம் பாதுகாத்து இருக்கக் கூடிய இவ்வளவு வளங்களும் வீணாகிவிடும். இந்த திட்டம் நடந்தால் அந்தப் பகுதியில் இருக்கக் கூடிய லட்சக்கணக்கான மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், மீன்களும் குறைந்து விடும். அந்தப் பகுதிக்கு மீனவர்கள் இனிமேல் செல்லவே முடியாது என்ற நிலை ஏற்படும்.
ஆமைகள் இறப்பில் சந்தேகம்
மிகப் பெரிய துளைகள் போடும் பணிகள் அங்கு நடைபெறும் என்றால் பல வகையான கெமிக்கல்கள் உள்ளே செலுத்தி தான் ஹைட்ரோ கார்பனை எடுப்பார்கள். இந்த செயல்பாட்டை செய்யும் போது அதிக அளவு நில அதிர்வு ஏற்படும். இந்த அதிர்வுகள் ஏற்படும் போது அங்கே இருக்கக்கூடிய உயிரினங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும். கடந்த சில நாட்களாக ஆமைகள் அதிகமாக இறந்து கரை ஒதுங்கின. ஆமைகள் அதிகமாக இறந்ததிலும் கூட பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. ஹைட்ரோ கார்பன் சோதனை செய்ததால் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது.
மன்னார் வளைகுடாவில் தான் பல உயிரினங்கள் உருவாகின்றன. எத்தனையோ வகை மீன்கள் அங்கே இருக்கின்றன. அரிய வகை உயிரினங்களும், புதிய வகை உயிரினங்களும் அங்கு இருக்கின்றன. சமீபத்தில் எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவில் பல பாதிப்புகள் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்பட்டது. அதே போல இந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் போது கண்டிப்பாக சில இடங்களில் கசிய தான் செய்யும். இதனால் மேலும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும்.
'No Go Zone'
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எவ்வாறு அறிவித்தார்களோ அதே போல இப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மீன்வளம் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு சிஆர்இசட் (CRZ) வரைபடம் மிகவும் முக்கியம். No go Zone என்று இருக்கக் கூடிய பகுதிகளில் எந்த திட்டமாக இருந்தாலும் சரி அப்பகுதியில் நடைபெறக் கூடாது. ஆனால் இத்திட்டத்தில் No Go Zone பகுதிகள் உள்ளடக்கி இருக்கிறது.
கார்பன் உமிழ்வு
தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அறிவிப்பு எப்பொழுதோ வந்திருக்கிறது. மொத்த பரப்பளவை சேர்த்தால் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் ஆழ்கடலிலும் சரி, ஆழமில்லாத பகுதிகளிலும் சரி, இந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். ஹைட்ரோ கார்பனை பிரித்து எடுத்து வாயுவாகவோ அல்லது எண்ணெய்யாகவோ மாற்றினால் அது கார்பன் உமிழ்வுக்கு தான் வழி செய்யும்.
ஏற்கனவே கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் ஒன்றரை லட்சம் சதுர கிலோமீட்டர் ஹைட்ரோ கார்பன் எடுக்கின்ற அறிவிப்பை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இத் திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசு இதை நடைமுறைப்படுத்தினால் சர்வதேச அளவில் பல அழுத்தங்கள் வரும். இந்த திட்டத்தில் முதலீடு செய்த அனைவரது பணமும் வீணாகும் மற்றும் இந்த உலகத்திற்கே பேராபத்தாக வந்து நிற்கும்" என்றார்.