சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – இளைஞர்கள் 2 பேர் கைது!
.
சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞர்கள் 4 பேரை பிடித்த மருத்துவமனை ஊழியர்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதில் இருவரை கைது செய்த போலீசார் 4 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கத்தியால் குத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.