பாகிஸ்தான் செல்லும் எஸ்.ஜெய்சங்கர்; பாகிஸ்தான் அமைச்சர்களை சந்திக்க மாட்டார்!
.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்ல உள்ளார்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறை.
ஒக்டோபர் 15ஆம் திகதி தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்ல உள்ளார்.
ஒக்டோபர் 15, 16ஆம் திகதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ‘எஸ்சிஓ’ கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்திய தூதுக்குழுவை வழிநடத்த உள்ளார்.
இதற்கு முன்பு டிசம்பர் 2015இல், அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ‘ஆசியாவின் இதயம்’ (heart of asia) மாநாட்டில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் சென்றிருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி ‘ஆச்சரியப் பயணமாக’ லாகூர் சென்றார். இப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தான் செல்வது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், “ஜெய்சங்கரின் பயணம் எஸ்சிஓ மாநாட்டுக்காகத்தான், அதற்கு மேல் யோசிக்க வேண்டாம்,” என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளை எஸ்.ஜெய்சங்கர் சந்திக்க மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.