அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல்
.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக படுகொலை ஞாபகார்த்த தூபியானது புனரமைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப் மேரியினால் திறந்துவைக்கப்பட்டது.
படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பும் வகையில் அருட்தந்தை க.ஜெகதாஸிடம் வழங்கப்பட்டது.
குறித்த நினைவுத்தூபியில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அங்குவந்த பொலிஸார் நினைவுக்கல்லை உடைத்தெறிந்து அங்கு பணியிலீடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய நிலையில் நேற்றையதினம் நினைவேந்தல் நடைபெற்றது.