கனடாவில் சீரற்ற காலநிலையினால் விமானப் போக்குவரத்திற்கு பாதிப்பு,
,

கனடாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த புயலுக்கு எதிராக பல நாட்களாக முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கிரேட்டர் டொரொன்டோ விமான அதிகாரசபை (GTAA) பேச்சாளர் எரிக்கா வெல்லா தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு ஏற்பட்டதும் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் விமானப் பயண ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளுமாறு கோரியுள்ளார். "இந்த குளிர்கால புயலை கையாள தயாராக இருக்கிறோம். இவ்வாரம் முழுவதும் பல பனிப்பொழிவுகளை சந்தித்துள்ளதால், இது நீண்ட வாரமாக இருந்தது," என்று வெல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவு தற்போது நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அநேக பகுதிகளில் குறிப்பாக டொரன்டோ பெரும்பாகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் 25 சென்டிமீட்டருக்கு மேல் பனிப்பொழிவு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் டொரன்டோவில் பதிவான அதிகூடிய பனிப்பொழிவு தற்போது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமான பகுதிகளின் பாடசாலைகள் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதைவேளை, சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
டொரொன்டோவின் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு இன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொரொன்டோ உயிரியல் பூங்கா (Toronto Zoo) இன்றைய தினம் (Sunday) சீரற்ற வானிலை காரணமாக மூடப்படும் என அறிவித்துள்ளது.
விலங்குகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பிற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறோம்," என உயிரியல் பூங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ராயல் ஒன்டாரியோ மியூசியம் (ROM) இன்றையதினம் சீரற்ற வானிலை காரணமாக மூடப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே நுழைவுச்சீட்டு கொள்வனவ செய்தவர்களுக்கு மீள அளிக்கப்படும் எனவும்,ஐந்து நாட்களில் இந்தப் பணம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ட் கேலரி ஒன்டாரியோ (Art Gallery Ontario) மற்றும் அகா கான் மியூசியம் (Aga Khan Museum) ஆகியவை பனிப்புயல் புயல் காரணமாக இன்று திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு சுற்றுலா இடங்களும் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.