NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும்!
NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்?

மிகச் சிறப்பான மக்கள் அங்கீகாரத்தையும் அரசியல் ஆணையையும் பெற்றிருக்கும் NPP, தீர்மானங்களை எடுப்பதில் குழப்பத்துக்கு – தடுமாற்றத்துக்கு- உள்ளாகியிருப்பது ஏன்?
இன்றைய இலங்கையில் அனைத்துச் சமூகத்திலும் ஜனவசியம் மிக்க ஒரே தலைவராக இருக்கிறார் அநுரகுமார திசநாயக்க. ஆனாலும் அந்த மக்களுடைய நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாதிருப்பது எதற்காக?
NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்?
ஜே.வி.பி தவிர்ந்த வெளிச்சக்திகளின் பின்னணியோ பிடியோ இல்லாமல் தனித்துச் சுயாதீனமாக NPP இயங்குவதாக இருந்தால், அந்த அடையாளம் என்ன?
இவ்வாறான கேள்விகள் NPP அரசாங்கத்தைக் குறித்தும் அநுரகுமார திசநாயக்கவைக் குறித்தும் எழுகின்றன. இவ்வாறான கேள்விகள் எழும் என்பதை NPP யும் புரிந்து கொள்ள வேண்டும். அநுரகுமார திசநாயக்கவும் புரிந்து கொள்ள வேண்டும். NPP யின் ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
00
இலங்கையின் சீரழிந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவே -மாற்றுச் சக்தியாகவே NPP ஐ மக்கள் பார்த்தனர்; இன்னமும் பார்க்கின்றனர். மக்கள் மட்டுமல்ல, வெளியுலகமும் அப்படித்தான் எதிர்பார்க்கிறது.
NPP யும் அப்படிச் சொல்லித்தான் அதிகாரத்துக்கு வந்தது. குறிப்பாக முறைமையில் மாற்றம் (System Change) செய்வதாக.
முறைமையில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நடைமுறையில் மாற்றம் ஏற்படும். இதனால்தான் முறைமையில் மாற்றம் செய்வதற்கான அதிகார பலத்தை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் NPPக்கு மக்கள் கொடுத்தனர். இல்லையெனில் 60 ஆண்டு வரலாற்றில் அப்படியொரு வெற்றியை NPP யோ JVP யோ பெற்றிருக்க முடியாது. இதனை JVP யும் NPP உம் புரிந்து கொள்வது அவசியம்.
ஆகவே முறைமை மாற்றத்தின் (System Change) மூலம் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பையும் NPP செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், முறைமை மாற்றத்தை (System Change) செய்வதற்குத் தயக்கம் கொள்கிறது NPP. அப்படியென்றால் இதைச் செய்யக் கூடிய ஆற்றல் NPP க்கு இல்லையா? அல்லது அதிகாரத்துக்கு வந்த பிறகு முறைமை மாற்றத்தை NPP விரும்பவில்லையா? அல்லது முறைமை மாற்றம் (System Change) தொடர்பாக NPP க்குள் குழப்பங்களும் இழுபறிகளும் நிகழ்கின்றனவா?
NPP க்குள் குழப்பங்கள் நிகழ்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. என்பதால்தான் ஜனாதிபதியின் கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் மாறான முறையில் அமைச்சர்களின் கருத்துகளும் நடவடிக்கைகளும் உள்ளன. ஜனாதிபதி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்போடு உள்ளதாகக் காட்டுகிறார். அநுரவின் உரைகளும் முயற்சிகளும் இதைச் சொல்கின்றன. அவரிடம் நிதானமும் மென்போக்கும் யதார்த்தத்தைப் புரிய வைக்கும் முனைப்பும் உள்ளது.
பௌத்த பீடங்களுடன் அநுரகுமார நெருக்கத்தைக் காட்டுவது கூட தன்னுடைய கடினமான நோக்கினை நிறைவேற்றுவதற்கான ஒரு வகையான அரசியல் உத்தியாகவே படுகிறது. அதாவது தனக்கும் சிங்கள பௌத்தத்துக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக அந்தத் தரப்பினர் உணரக் கூடாது. அப்படி உணர்ந்தால் அது தன்னுடைய மாற்று அரசியலை – முறைமை மாற்றத்தோடு கூடிய அரசியலை மேற்கொள்வதற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதியே பௌத்த பீடங்களுடன் நெருக்கத்தைக் காட்டுவதாக தெரிகிறது.
ஏறக்குறைய பிரதமர் ஹரிணியும் இந்த அலைவரிசையில்தான் உள்ளார். NPP யின் முகமே பிரதானமாக இவர்கள்தான்.
ஆனால், அரசாங்கத்தரப்பிலுள்ள ஏனையவர்கள் (NPP யின் ஏனைய ஆட்கள்) JVP யின் அடையாளத்தையே பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் இன்னும் இனவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை.
என்பதால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் உளநிலை (கரிசனை) NPP க்கு இல்லை என்பதை அமைச்சர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வரும் கருத்துகள் சொல்கின்றன. இது எவ்வளவு கவலைக்கும் வெட்கத்துக்கும் உரியது! இனவாதத்தைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் வரையில் JVP யினால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. இனவாதத்துக்கு வெளியே வந்து NPP யாக அது முகம் காட்டியபோதுதான் அதற்கு அங்கீகாரமும் அதிகாரமும் கிடைத்தது. தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவை NPP பெற்றதும் இனவாதமற்ற போக்கை அது கொண்டிருக்கிறது என்றபடியாற்தான்.
JVP யினர் NPP யைப் பிடித்துப் பின்னோக்கி இழுப்பதற்குக் காரணம், அவர்கள் இயல்பில் இனவாத சிந்தனையில் ஊறியவர்கள் என்பதே. ஆனால், அதிலிருந்து விலகி, மீறி வரவேண்டும் என்பதே வரலாற்றின் நிபந்தனையாகும்.
ஆனாலும் இந்த விடயத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் வழித்தடத்திலேயே NPP யும் பயணிக்க முயற்சிக்கிறது. அல்லது NPP ஐ அப்படிப் பயணிக்க வைக்க JVP முயற்சிக்கிறது.
தன்னுடைய நிறைவேற முடியாதிருந்த நீண்டகாலக்கனவுகளை NPP யின் மூலம் நிறைவேற்றுவதற்கு JVP விரும்புகிறது.
அதனால் அது NPP யில் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயற்சிக்கிறது. என்பதால்தான் NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் நீடிக்கின்றன. NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் உள்ளவரை அதனால் முறைமை மாற்றத்தை (System Change) மட்டுமல்ல மக்கள் எதிர்பார்க்கின்ற எதையும் செய்யவே முடியாது.
இதுதான் இப்போது NPP மீதான விமர்சனங்களாகவும் நம்பிக்கையீனமாகவும் மேற்கிளம்புகின்றன.
இதொரு புறமிருக்க, தமிழ் பேசும் சமூகத்தினர் நம்பிக்கை கொள்ளக் கூடிய அளவுக்கு NPP யின் எந்தச் செயற்பாடுகளும் அமையவில்லை. பதிலாக அவர்களுடைய நம்பிக்கையைச் சிதைக்கும்படியாகவே அமைச்சர்களின் பேச்சுகளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் உள்ளன.
இதனால்தான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது தமிழ் பேசும் மக்களிடம் NPP க்கான ஆதரவில் இறக்கம் நிகழ்ந்தது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஆதரவையும் விட உள்ளுராட்சித் தேர்தலில் கூடுதலான ஆதரவு கிட்டும் என்றே NPP எதிர்பார்த்தது. இதற்காக வடக்குக் கிழக்கு மற்றும் மலையகமெங்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எனப் பலரும் கிராமங்களுக்குக் கூடச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் NPP யே கைப்பற்றும் என்று அமைச்சர் சந்திரசேகரன் உள்பட NPP பலரும் வெளிப்படையாகவே சொன்னார்கள்; நம்பினார்கள். ஆனால், ஒரு சபையைக் கூட NPP யினால் கைப்பற்ற முடியவில்லை. (இதற்குப் பிரதான காரணம் அமைச்சர் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போன்றோரின் பொறுப்பற்ற அதிகாரத்தனமான பேச்சுகளும் கேலிக்குரிய நடத்தைகளுமாகும் என்று சொல்கிறார்கள் வடக்கிலுள்ள NPP ஆதரவாளர்கள்).
வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் வெவ்வேறு விதமாக NPP மீதான கேள்விகள் எழுந்துள்ளன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை NPP க்கு. இதனால்தான் தாம் ஆட்சியமைக்கக் கூடிய சபைகளில் தாம் ஆட்சியமைப்பதற்கு யாராவது இடையூறு விளைவித்தால் – இடைஞ்சலாக இருந்தால் –கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி நிதானமிழக்க நேர்ந்தது.
இந்த நிதானமிழப்பை NPP யின் அமைச்சர்கள் பலரிடத்திலும் கூடக் காண முடிகிறது.
அவர்கள் நிதானமிழந்தால் அவர்களுக்கும் NPP க்கும்தான் நட்டம்; பாதிப்பு. மக்களுக்கும் பாதிப்புண்டுதான். ஆனால், அவர்கள் வரலாற்றின் ஓட்டத்தில் இன்னொரு மாற்றத்துக்காக முயற்சிப்பார்கள். ஒரு காலம் ராஜபக்ஸக்களை ஏற்றுக் கொண்ட மக்கள், இன்னொரு காலச் சூழலில் அவர்களை விரட்டி அடித்த்தைப்போல, NPP யை விட்டு விட்டு இன்னொரு சக்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
ஆகவே மக்களைத் தம்மோடு வைத்துக் கொள்வதா இல்லையா என்பதை NPP தான் முடிவு செய்ய வேண்டும். மக்களைத் தம்முடன் வைத்துக் கொள்வதென்றால், அவர்களுடைய நியாயமான தேவைகளை நிறைவேற்ற வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.
இதற்கு முறைமை மாற்றம் (System Change) அவசியம். அதைச் செய்வதற்கு காலம் தாழ்த்தவே கூடாது. காலம் தாழ்த்தினால் எதிர்த்தரப்புகள் பலமடையும். இலங்கை போன்ற நாடுகளில் எளிதாக மாற்றத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கான வரலாற்றுச் சூழல் எப்போதும் அமைவதல்ல. NPP அது கிடைத்துள்ளது. நாட்டுக்கும் அது வாய்த்திருக்கிறது.
இப்பொழுது – கடந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே -எதிர்த்தரப்புகள் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மேலெழத் தொடங்கி விட்டன. மறுவளத்தில் NPP எதிர்த்தரப்புகளின் அரசியல் அழுத்த்ததிற்குப் பணியும் நிலையில் உள்ளது. தடுமாற அல்லது குழம்பத் தொடங்கி விட்டது. அதனால்தான் லால்கந்த, விஜித ஹேரத், ஹந்துன் நெத்தி போன்றவர்களெல்லாம் இனவாதத்தைத் தூக்க முற்படுகிறார்கள். இனவாதத்தைத் தூக்கினால்தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
இனவாதத்தை தமது அரசியலாக – அரசியல் முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்திய சுதந்திரக் கட்சி, ஐ.தே.க மற்றும் ராஜபக்ஸக்களின் பெரமுன போன்ற சக்திகளை வரலாறு புறமொதுக்கித் தோற்கடித்து விட்டது. மட்டுமல்ல, இனவாதத்தை அரசியல் மூலதமாக்கியதால்தான் அந்தக் கட்சிகள் தோற்றதோடு, நாடும் அழிவடைந்தது. பல்லாயிரம் மக்கள் உயிரிழக்க நேர்ந்தது. பல்லாயிரம் பேர் அங்கவீனர்களாயினர். பெருமளவு சொத்துகளும் இயற்கை வளமும் அழிந்தது. நாடு தாங்கவே முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. அந்திய சக்திகளிடத்திலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் கால்களில் விழ வேண்டியேற்பட்டது.
வரலாறு இதை JVP க்கும் NPP க்கும் மக்களுக்கும் தெளிவாக உணர்த்தியுள்ளது. இதை JVP – NPP புரிந்து கொள்ளத் தவறினால் இவர்களும் வரலாற்றின் குப்பைக்குள்தான் வீசப்படுவர்.
முடிவாக, அரசியலமைப்பு மாற்றம் உள்பட அனைத்திலும் திருத்தங்களை NPP தாமதிக்காமல் செய்ய வேண்டும். இலங்கையில் இப்போதுள்ளது காலனித்துவ ஆதிக்கச் சிந்தனைமுறையும் கட்டமைப்புகளுமேயாகும். இதை மாற்றியமைப்பதைப் பற்றி அரசாங்கமும் எதிர்த்தரப்புகளும் சிந்திக்க வேண்டும். அதாவது காலனித்துவச் சிந்தனையிலிருந்தும் கட்டமைப்புகளிலிருந்தும் (Decolinize) விடுபட வேண்டும். இதற்கான ஒரு புதிய அரசியற் பண்பாட்டைக் கொண்ட முன்னெடுப்பும் அதற்கான கட்டமைப்பும் அவசியமாகும்.
எதிர்ச்சக்திகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் மீறி எழுந்து, நாட்டுக்குத் தேவையானதை, சரியானதைச் செய்வதே அரசியல் ஆளுமையின் பணியாகும். அநுரகுமார திசநாயக்க அந்தத் தலைமைப் பாத்திரத்தை வகிக்க வேண்டும். அதற்கான அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கிருக்கிறார்கள். மக்களுடைய ஆணைக்கும் அங்கீகாரத்துக்கும் மதிப்பளிப்பதே ஜனாதிபதிக்கான முதற்கடமை. அதற்குப் பின்புதான் அவர் தன்னுடைய கட்சிக்கான இடத்தை அளிக்க வேண்டும். கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக மக்கள் வழங்கிய வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பாழடிக்கக் கூடாது.
வரலாறு எப்போதும் ஒரு சுழலுக்குள் நிற்பதில்லை. அப்படி நின்றிருந்தால் உலகில் முன்னேற்றமோ வளர்ச்சியோ, மாற்றமோ ஏற்பட்டிருக்காது. ஒரு காலம் மேற்கு நாடுகளில் மிக மோசமான பிற்போக்குத்தனமும் வெறித்தனமும் இருந்தது. விளைவாகப் பெரும் போர்கள் கூட நடந்தன. பேரழிவுகள் ஏற்பட்டன. அதிலிருந்து படித்துக் கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் அவர்கள் முன்னேற்றத்தை அடைந்தனர். மாற்றங்களை உருவாக்கினர்.
எனவே NPP செய்ய வேண்டியது அறுவைச் சிகிச்சையே தவிர, புண்ணைத் தடவிக் கொடுத்தல் அல்ல. அதாவது தற்காலிக சுகமளித்தல் அல்ல. JVP யின் உருவாக்கம், அதனுடைய 60ஆண்டுகால அரசியல் முன்னெடுப்பு, NPP யின் 10ஆண்டுகால அரசியல் எல்லாம் System Change ஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றமே. மக்களின் ஆணையும் அதற்கானதே. அதைச் செய்யவில்லை என்றால் எதற்காக NPP? ரணில், மைத்திரி, சஜித் போன்றவர்கள் போதுமே. அவர்களுடைய போதாமை – தவறுகளுக்கு – மாற்றுத்தானே அநுரவும் NPP யும்.
கருணாகரன்