பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது சம்பந்தமான யோசனை!
கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்ற வளாகத்தில் உணவு தயாரிக்கும் சமையலறை உட்பட பல இடங்களை ஆய்வு செய்தனர்.
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற சபைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சபாநாயகரின் வேண்டுகோளுக்கு அமைய, பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்ற வளாகத்தில் உணவு தயாரிக்கும் சமையலறை உட்பட பல இடங்களை ஆய்வு செய்தனர்.
அதற்கமைய, இந்த ஆய்வின் அவதானிப்புகள் அடங்கிய விரிவான அறிக்கை பொது சுகாதார பரிசோதகர்களால் சபைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி வை.பி. இந்திக்க தெரிவிக்கையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் சுமார் 150 அரச நிறுவனங்களின் உணவுப் பாதுகாப்பை ஆய்வு செய்திருந்தாலும், பாராளுமன்றத்தின் உணவுப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.
இதற்காகத் தலையிட்ட சபாநாயகருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, பாராளுமன்றத்தின் உணவுப் பொருட்களைப் பெறுவது முதல் உணவு உற்பத்தி, களஞ்சியம் மற்றும் பரிமாறுவது வரையிலான ஆய்வின் அறிக்கை சபாநாயகருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனைய பணியாளர்களுக்குப் பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.
அதற்கமைய, பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் பிரிவில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தில் சமையலறை தொடர்பான நிபுணத்துவம் பெற்ற பொறியியலாளர் அல்லது கட்டடக் கலைஞர், பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டுப் பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பாராளுமன்றத்தின் இணைப்புப் பொறியியலாளர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்க வேண்டும் என இங்கு முன்மொழியப்பட்டது.


