இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது?; டிசம்பருக்குள் பொது தேர்தல்
.
நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என்றும், எதிர்வரும் டிசம்பருக்குள் பொது தேர்தல் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று பதவி விலகியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட நால்வர் அடங்கிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வட்டாங்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பபடி, ஜனாதிபதி அநுரகுமார சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளையும், பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுகளையும் வைத்திருப்பார்கள் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
கொழும்பு தேர்தல் தொகுதியில் அநுரகுமார திசாநாயக்கவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நிபுண ஆராச்சி நேற்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்ற கலைக்கப்பட்ட பின்னர், டிசம்பரில் பொது தேர்தல் நடத்தப்படும் எனவும் அதன் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க 56 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
இதன்படி, நேற்று காலை அவர் பிரதம நீதியரசர் முன்னிலையில் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.