தேசபந்துக்கு எதிராக ஹரிணி குழுவால் முன்வைக்கப்பட்ட மனுவை , விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!
.
முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் (22) உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2023இல் கொழும்பின் பொல்துவவில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின்போது, முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பல அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பெண்களின் உரிமைகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ் வழக்கு நீதியரசர்கள் யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளில் தேசபந்து தென்னகோன், வெலிக்கடை, தலங்கம மற்றும் மிரிஹான ஆகிய இடங்களைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் நுகேகொட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் அடங்குவர்.
ஆகவே தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2023 டிசம்பர் 4ஆம் திகதியன்று, மகளிர் விவகார அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்க, தாம் பொல்துவ சந்திப்பில் கூடியபோதே, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில், சட்டவிரோதமான முறையில் இந்தக் கூட்டத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.