முதல் தடவையாக உலக சாம்பியனான நியூஸிலாந்து மகளிர் அணி
.
இருபதுக்கு இருபது மகளிருக்கான உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி சுவீகரித்தது.
தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூஸிலாந்து மகளிர் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.
இம்முறை உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் முனைப்புடன் தென்னாபிரிக்க, நியூஸிலாந்து மகளிர் அணிகள் களமிறங்கின.
2024 மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைமையில்
தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(20) நடைபெற்றது.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணித்தலைவி லாரா வோல்வார்ட் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணிக்கு சுசீ கேட்ஸ், ஜோர்ஜியா ப்ளிமர் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.
இவர்கள் இருவரும் 16 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன் ப்ளிமர், அயோபங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நியூஸிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்களும் 70 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
நான்காவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த ப்ரூக் ஹெலிடே மற்றும் அமீலியா கர் ஆகியோர் 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு வலுசேர்த்தனர்.
ப்ரூக் ஹெலிடே 38 ஓட்டங்களையும் அமீலியா கர் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து மகளிர் அணி 5 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.
159 எனும் வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு, அணித்தலைவி லாரா வோல்வார்ட் மற்றும் டஸ்மின் க்ரட்ஸ் ஆகியோர் ஆரம்பத்தை வழங்கினர்.
இவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டிற்காக 51 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
டஸ்மின் ப்ரிட்ஸ் 17 ஓட்டங்களையும் அணித்தலைவி லாரா வோல்வார்ட் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
எவ்வாறாயினும் அதன் பின்னர் களமிறங்கிய தென்னாபிரிக்க மகளிர் அணியின் எந்தவொரு வீராங்கனையும் அதிக ஓட்டங்களை பெறுவதற்கு நியூஸிலாந்து வீராங்கனைகள் இடமளிக்கவில்லை.
ரோஸ்மேரி மேயர் மற்றும் அமீலியா கர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இறுதியில் தென்னாபிரிக்க மகளிர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
அதற்கமைய சோபி டிவைனின் தலைமைத்துவத்தின் கீழான நியூஸிலாந்து மகளிர் அணி, முதல் தடவையாக இருபதுக்கு 20 மகளிருக்கான உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.