யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-01. ஐரோப்பியர் கால யாழ்ப்பாணம் !
யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் : பகுதி-01.
ஐரோப்பியர் கால யாழ்ப்பாணம் வரலாற்று குறிப்புகள்.
ஈழத் தமிழர்களுக்கு என ஓர் இராச்சியம் இருந்தது. பல சிற்றரசுகளும் இருந்தன.
பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்த்துக்கீச வரலாற்று ஆசிரியரான பேர்னாஓ. டி. கேரோ என்பவர் யாழ்ப்பாண ராச்சியம் அப்பிராந்தியத்தில் (வங்காள விரிகுடா) மிகவும் செல்வாக்கு மிக்க ராச்சியமாகவும், பலமிக்கதாகவும் இருந்துள்ளது என தனது இலங்கை பற்றிய நூலில் குறிப்பிட்டுள்ளார். தமிழை தாய் மொழியாகக் கொண்டு இருந்தாலும், ஐரோப்பியரும், அரபுக்களும் இலங்கை தீவிற்கு வரும் வரை சைவர்களாகவும், மகாயான பௌத்தர்களாகவும் எமது மூதாதையர்கள் வாழ்ந்துள்ளனர், பின்னர் ஒரு சிலர் அரபுக்களினதும்,ஐரோப்பியரினதும் வருகையை தொடர்ந்து இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தழுவி கொண்டனர் . ஈழத் தமிழர் உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்துள்ளனர் இருந்தும்,
எமது ராச்சியத்தை எப்படி இழந்தோம்? அந்நியர் ஆட்சியில் எப்படி எமது மூதாதையர் வாழ்ந்தனர் ?
அவர்கள் எமக்கு எவற்றை விட்டு சென்றனர்? என்பது பற்றி எம்மவர்கள் பலருக்கு போதிய அளவு தெரியாது. இது பற்றிய தேடலின் விளைவே இந்த ஆவணம்.
இயன்ற அளவுக்கு இந்நூலில் ஒரு சில தகவல்கள் உள்ளன ஆனால் இவை முழுமையானவை அல்ல. வரலாறு பற்றிய தேடலில் உள்ளவர்களுக்கு இது பிரயோசனமாக அமைய வேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடே இப்பிரசுரம், இதை தொடர்ந்து இலங்கைத் தீவின் வரலாறு பற்றிய வெளிவராத தகவல்களை உள்ளடக்கிய எமது வெளியீடுகள் இன்னும் வெளிவரும்.
"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம்.
1505 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்துடன் தொடர்பு பட்ட கால அட்டவணை.
போர்த்துக் கேயர் காலம் 1505 -1658 வரை.
1505- ஏப்ரல்- டொன் லோறன்சோ அல்மெய்டா என்பவர் தலைமையில் போர்த்து கேயர் இலங்கையில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
1518- லோப்பஸ் சுவார் அல்வரெலங்கா என்பவர் 19 கப்பல்களில் இலங்கை வந்து சிங்களவரின் சிறிய எதிர்ப்பின் மத்தியில் கொழும்பில் ஒரு கோட்டையை நிறுவினர்.
1536- யோவாஒ பொன் றெயறோ என்ற முதலாவது றோமன் கத்தோலிக்க மேற்றிராணியார் மரண மடைந்தார்.
1544- புனித பிரான்சிஸ் சேவியரால் அனுப்பட்ட கத்தோலிக்க குருமார் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இக்கால கட்டத்தில் மதம் மாறிய 600 பேரை யாழ்ப்பாண அரசன் கொலை செய்தான்.
1545- போர்த்து கேய படைகள் மன்னார் நகரத்தை யாழ்ப்பாண அரசனிடமிருந்து கைப்பற்ற முயன்றனர்.
1545- ஏப்ரல் -புனித பிரான்சிஸ் சேவியர் மீண்டும் மன்னாருக்கு விஜயம் செய்தார் அக்கால கட்டத்தில் தொற்று நோய் காரணமாக அன்றாடம் 100 பேரளவில் மரணமடைந்தனர்.
1548- புனித பிரான்சிஸ் சேவியர் மீண்டும் மன்னார் வந்தார் பின்னர் யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாண அரசனை சந்தித்து போர்த்து கேயருடன் ஒர் உடன்பாட்டை செய்ய வைத்தார்.
1548- அதே ஆண்டில் அவர் கண்டி,காலி போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்தார்.
1552 - டிசம்பர் 2 ஆம் திகதி புனித பிரான்சிஸ் சேவியர் இறைவனடி சேர்ந்தார்.
1554- மார்ச் 15 புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் 'கோவா' விற்கு கொண்டு செல்லப்பட்டது.
1560 - ஆம் ஆண்டில் மன்னார் போர்த்துகேயருக்கு கையளிக்கப்பட்டது.
1575- புனித யோவான் தேவாலயத்தை கட்டுவதற்கு அத்திவாரம் தோண்டிய போது ரோமானிய சக்கரவர்த்தி குளோடியசின் உருவம் பதித்த தங்கத்தாலும், பித்தளையாலும் நாணயங்களை யோன் மெல்லுஸ் என்பவர் கண்டெடுத்தார்.
1580 - அதற்கு பின் இலங்கைத்தீவை போர்த்துகேய அரசுக்கு கையளிக்க அரசனாகிய தர்மபாலன் ஒத்துக்கொண்டார்.
இதே ஆண்டில் ஓர் பிரன்சிஸ்கன் தேவாலயத்தை யாழ்ப்பாணத்தில் போத்து கேயர் கட்ட யாழ்ப்பாண அரசன் அனுமதி வழங்கினார்.
1588- கோணப்பு பண்டாரத்துடன் செய்து கொண்ட ஒப்பந்ததிற்கு மாறாக டொன் பிலிப் என்பவனை முடிக்குரியவனாக மாற்றினர். கண்டியில் தமக்கென ஒரு இடத்தை போர்த்துகேயர்கள் பெற்றுக்கொண்டனர்.
1591-ஆன்ட்ரே பூர்ராடோ டி எம்டோன்சா என்ற பிரபல்யமான போர்ததுகேய தளபதி யாழ்ப்பாண பட்டணத்தை கைப்பற்றினான். யாழ்ப்பாண பட்டணத்தை சேர்ந்த அநேகர் கத்தோலிக்க மதத்தை தழுவினர்.
1592- டிசம்பர் 03 'எட்வேட் பொன் அவந்தியூர்' என்ற முதலாவது ஆங்கிலேயரின் கப்பல் காலி துறை முகத்தை வந்தடைந்தது.
1592 -தனது 120 வது வயதில் முதலாம் ராஜசிங்கன் மரணமடைய 'விமலதர்மன' என்னும் பெயரில் கோணப்பு பண்டா என்ற சிங்களவன் தன்னை அரசனாக அறிவித்தான்.
1593 - பலம் பொருந்திய படையுடன் டொன் பேதுரு டி சுசா என்பவன் கோவாவில் இருந்து அனுப்பட்டான். அவன் கண்டியை தனது ஆளுமைக்குட்படுத்தினான்.சிங்கள மக்களை திருப்திபடுத்த பழைய கண்டிய அரசனின் மகளான டொனா கர்த்தறினாவை ராணியாக்கினான். மன்னாரிலுள்ள போர்துக்கேயரின் பாதுகாப்பில் ஓர் கத்தோலிக்கப் பெண் ஆக படிப்பிக்கப்பட்டவள் ஆகும்.
1593- இதே ஆண்டில் விமலதர்மன டி சுசாவை தோற்கடித்து டொன் கர்த்தரினாவை பின்னர் திருமணம் செய்து கொண்டான்.
1602- மே டச்சுக்கார் இலங்கையை வந்தடைந்தனர். ஒல்லாந்து தளபதியின் நட்பையும் ஒரேஞ் வம்ச இளவரசனின் உடன் பாட்டையும் நட்பையும் ஒல்லாந்து கடல் தளபதி அட்மிரல் டொறிஸ் ஸ்பில்பேர்கன் கண்டி அரசனுக்குத் தெரிவித்தான். இது கண்டி அரசானால் ஏற்று கொள்ளப்பட்டது.
1613 யூலை 20- டொனா கர்த்தரீனா அரசி மரணமடைந்தாள்.
1614 மே 8- யாழ்ப்பாணத்தில் போர்த்துகேயர் ஆலயம் அத்திவாரமிடப்பட்டது.
1615- தனது வாரிசாக 3வயது குழந்தையை விட்டு விட்டு பரராச சேகர பண்டாரன் இறந்து போனான்.
1617- யாழ்ப்பாணத்தில் போர்த்துகேயரின் கொடி ஏற்றப்பட்டது. டி ஒலிவேரா யாழ்ப்பாணத்தின் முதல் போர்த்துகேய ஆளுனர் ஆக நியமிக்கப்பட்டான்.
1621- வல்வெட்டிதுறையில் போர்த்துகேயர்கட்கும், தழிழர்கட்கு மிடையில் ஓர் போர் நிகழ்ந்தது. இதில் தழிழர்கள் தோற்று போயினர்.
1622 மார்ச் 22 -பிரான்சில் சேவியர் புனிதராக திரு நிலைப்படுத்தப்பட்டார்.
1624- போர்த்து கேயர்கள் யாழ்ப்பாண நகரில் கோட்டையை நிறுவினர்.
1627- பெப்ரவரி 20 ஓர் புயலுடன் கூடிய பாரிய அலை யாழ்ப்பாண நகருக்கு பெருஞ்சேதத்தையும், உயிரழிவையும் ஏற்படுத்தியது.
1627-மார்ச் 22 யாழ்ப்பாணத்தின் முதல் போர்த்து கேய ஆளுனர் டி ஒலிவேரா மரணமடைந்தான்.
1628-யேசுவின் சபையை சேர்ந்த இரு குருவானவர்கள் அந்தோனியோ பேசி, இருமந்தியு பெர்ணான்டேஸ் ஆகிய இருவரும் வேத சாட்சிகளாக இறந்து போனார்கள்.
1632-யாழ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1638 - 1606 ஆம் ஆண்டில் மதுரையில் யேசுவின் சபையை நிறுவிய ரொபேட் டி. னொபிலி கண் பார்வை இழந்து, யாழ்ப்பாணம் வந்து வாழ்ந்தார்.
1644 - யாழ் யேசுவின் சபையின் வேலை பற்றிய அறிக்கை அதன் தலமைப்பீடத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தில் 12 தங்குமிடங்களை யேசு சபை கொண்டிருந்தது.
1646 - போர்த்து கேயர்களுக்கும்,டச்சுக்கார்களுக்குமிடையில் தற்காலிக சமாதானம் ஏற்படுத்தப்பட்டது.
1651 - ஏப்ரல் 21 யோசப் வாஸ் கோவாவில் பிறந்தார்.
1655 - போர்த்து கேயர்களுக்கும்,டச்சுக்கார்க்குமிடையில் பகைமை மீண்டும் ஆரம்பித்தது.
1655 டிசம்பர் 10 - யாழ்ப்பாணத்தின் போர்த்து கேய ஆளுனரான அட்மிரல் அந்தோனியோ டி. மென்சஸ், மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முட்டுவால் என்னும் இடத்தில் வைத்து டச்சுகாரரினால் சிறை பிடிக்கப்பட்டார்.
1658 பெப்ரவரி 22 - மன்னார் டச்சுக்காரரால் கைப்பற்ற பட்டது.
1658 மார்ச் - டச்சுகாரர் யாழ்ப்பாண கோட்டையை முற்றுகையிட்டனர்.
1658 ஏப்பரல் 10 - ஊர்காவற்துறை கோட்டை டச்க்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
1658 யூன் 22 - யாழ்ப்பாண கோட்டையில் இருந்த போர்த்து கேயர் டச்சுகாரரிடம் சரனடைந்தனர். யாழ் கோட்டை டச்சுகார் வசம் வீழ்ந்த்து.