Breaking News
இலங்கை மக்களின் எதிர்காலத்தை அடுத்த 5 வருட காலத்துக்குத் தீர்மானிக்கபோவது யார்! - சிவா சின்னப்பொடி.
.
இலங்கை மக்களின் எதிர்காலத்தை அடுத்த 5 வருட காலத்துக்குத் தீர்மானிக்கபோவது யார்!
இலங்கை மக்களின் எதிர்காலத்தை அடுத்த 5 வருட காலத்துக்குத் தீர்மானிக்கபோவது யார் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.நான் இலங்கையில் நின்ற ,கடந்த இரண்டு மாத காலத்தில் ராஜபக்ஷக்களின் கோட்டையாக இருந்த காலி மாத்தறை அம்பாந்தோட்டை முதலான பல இடங்களுக்குச் சென்று பார்த்ததில் அனுர குமார திசாநாயக்காவுக்கான அலை வீசுவதை அவதானிக்க முடிந்தது.ரணிலும் சஜித்தும் தங்களுது முகவர்கள்மூலம் மக்களைத் தங்கள் கூட்டங்களுக்கு வலிந்து அழைத்துச் செல்வதையும் , ஆனால் அனுராவின் கூட்ட்ங்களுக்கு மக்கள் தாங்களாகவே வாகனங்களை ஒழுங்கு செய்து செல்வதையும் காணமுடிந்தது .தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ள கலாநிதி லயனல் போபகே கூறியுள்ள ஒரு கருத்து சிங்கள தரப்பின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"அநுரகுமாரவே எனது தெரிவு: இலங்கையில் அதிகார கைமாற்றல் சுமுகமாக இடம்பெறும் என நம்புகிறேன்" இதுவே அந்தக் கருத்தாகும்.
கலாநிதி லயனல் போபகே, ரோஹன விஜேவீர தலைமையிலான ஜேவிபி இன் முதலாவது பொதுச் செயலாளரக இருந்தவர் . இருவரும் சம காலத்தவர்கள் மற்றும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள்.
இவர்கள் இருவரும் 1947 பாராளுமன்றத் தேர்தலின்போது மாத்தறை மாவட்டத்தில் யுஎன்பி ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிப்புகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் குடும்பங்களின் வாரிசுகள்.
1960 களில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மாணவராக இருந்த போபகே ஜேவிபி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1971 கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் .
பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தோற்றுவதற்கென 1972 இல் கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து அவர் பேராதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மீண்டும் 1983 இல் 'தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டினார்கள்' என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் ஜே ஆர் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 21 இடது சாரி செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர்.
"கறுப்பு ஜூலை அட்டூழியங்கள் தொடர்பாகச் சிரில் மத்தியூ மற்றும் காமினி திஸாநாயக்க போன்றவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல் எங்களைக் கைது செய்தது ஏன்? யுஎன்பி யைத்தடை செய்வதற்குப் பதிலாக, ஜேவிபியை தடை செய்தது ஏன்" எனக் கேட்டு, அச்சந்தர்ப்பத்தில் போலிஸாருடன் வாதிட்டதை நினைவு கூருகிறார் போபகே.
ஆனால், இரண்டு முதன்மையான விடயங்களின் அடிப்படையில் ரோஹன விஜேவீரவுடன் முரண்பட்டுக் கொண்ட அவர் 1983 இல் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, ஜேவிபி இலிருந்து வெளியேறினார்.
சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்தமை மற்றும் ஜேவிபி மீண்டும் வன்முறையை ஓர் அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்திருந்தமை ஆகிய இரண்டு நிலைப்பாடுகள் தொடர்பாக விஜேவீரவுக்கும், அவருக்குமிடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் தோன்றின. அந்த நிலையில், கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இருந்து வரவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து ஜேவிபி இன் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறார்.
தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் கலாநிதி லயனல் போபகே 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இந்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்கள் ஆகியோரின் அரசியல், கலாசார உரிமைகளுக்காக அந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் முன்னெப்பொழுதும் இருந்திராத அளவில் தீவிரமடைந்திருக்கும் இந்தத் தருணத்தில் நாடு திரும்பியிருக்கும் அவர் ஒரு யூடியூப் தளத்தில் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரியுடன் நடத்திய விரிவான உரையாடலொன்றில் இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்கள்குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
'' தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஜேவிபி நிலைப்பாடு மற்றும் அதன் வன்முறைச் சாய்வு ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களின் அடிப்படையில் நீங்கள் 1983 ன் பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறி, அதன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இன்று ஜேவிபி யின் புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இது ஏன் என விளக்க முடியுமா''? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் -
''தேசிய இனப் பிரச்சினை மற்றும் வன்முறை ஆகிய விடயங்கள் தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று, சமத்துவமான பிரஜைகளாகக் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சூழல் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே எனது அவா."
"2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஜேவிபி யின் அணுகுமுறையில் படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். இப்பொழுது அந்த அணி 'சுய நிர்ணய உரிமை' என்ற வார்த்தையை நேரடியாகக் கூறாவிட்டாலும் கூட, தமிழ் மக்களையும் உள்ளிட்ட இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன என்ற விடயத்தையும், அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் புறம்பான விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற விடயத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.
"அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அவர்கள் விரிவாக விளக்கிக் கூறாவிட்டாலும் கூட அதுவே ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றம் என நான் நினைக்கிறேன்".
"மேலும் இன்று தேசிய மக்கள் சக்தி பல முற்போக்கு அமைப்புகளையும், குழுக்களையும், பன்முகப்பட்ட தொழில்வாண்மையாளர் கழகங்களையும் உள்வாங்கிய ஒரு பரந்த முன்னணியாக எழுச்சியடைந்திருக்கின்றது."
"மாகாண சபைகள் தொடர்பாக NPP இன்னமும் ஒரு சில மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை அது ஏற்றுக் கொள்கின்றது. குறிப்பாக, தமிழ் தரப்புடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அது கருதுகிறது." என்று கூறினார்.
" 'பழைய ஜேவிபி இப்பொழுது என்பிபி என்ற முகமூடியுடன் களமிறங்கியிருக்கிறது. அது எந்த ஒரு நேரத்திலும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்க முடியும்' என ஒரு சில விமர்சகர்கள் கூறி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்" என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,
"இலங்கை சமூகத்தின் அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்கி ஒரு பாரிய மக்கள் இயக்கமாக எழுச்சியடைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி இனிமேல் எந்தவொரு காரணத்திற்காகவும் வன்முறையை நாட வேண்டிய தேவை அறவே இருந்து வரவில்லை" என ஆணித்தரமாகக் கூறினார்.
"1987 - 1989 கிளர்ச்சியின்போது ஜேவிபி ஒரு தீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன.
"ஆனால், இன்றைய என்பிபி யில் அந்தக் கருத்தியலுக்கு இடமில்லை. எனவே, எமக்கு உடனடியாகத் தேவைப்படும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பிக் கொள்வதற்காக ஒரு நல் வாய்ப்பாக இலங்கை மக்கள் அனைவரும் இந்த வரலாற்று ரீதியான எழுச்சித் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நான் வலுவாக நம்புகிறேன்" என்கிறார் கலாநிதி போபகே.
நான் அவதானித்தவரை மக்களால் 'நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் திருடர்கள்' என்று குற்றம் சாட்டப்பட்ட பலர் ரணிலுக்கு சஜித்துக்கும் பின்னால் ஒழிந்திருக்கிறார்கள்.ராஜபக்ஷ கும்பல் செய்த அனைத்து கொடூரங்களுக்கும் உடந்தையாக இருந்த இவர்களை வைத்துக்கொண்டு 'நாங்கள் தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கத் தயாராக உள்ளோம்' என்று ரணிலும் சஜித்தும் கூறுவதை நம்புங்கள் என்று சொல்லித் தமிழ் மக்களை மடையர்களாக்கும் வேலையைத்தான் தமிழ் தலைவர்கள் இன்றுவரை செய்து கொண்டிருக்கிறார்கள்.
( கலாநிதி லயனல் போபகே அவர்கள் தற்போது தெரிவித்துள்ள தகவல்கள் பொருளியல் நோக்கு இதழின் முன்னாள் ஆசிரியர் எம்.எல்.எம்.மன்சூர் அவர்களின் கட்டுரையிலிருந்து பெறப்பட்டது )
சிவா சின்னப்பொடி.