பலதும் பத்தும். 04.04 .2026 - இAi தரவு மையத்தைத் தாக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை !
ஈரான்மீது சுமார் 40 நாடுகள் இணைந்து கூட்டு நடவடிக்கை!
Ai தரவு மையத்தைத் தாக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை !
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்டமான ஸ்டார்கேட் Ai தரவு மையத்தைத் தாக்கப்போவதாக ஈரான் அச்சமூட்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே பஹ்ரைன் மற்றும் துபாயில் உள்ள அமேசான் மற்றும் ஆரக்கிள் தரவு மையங்களைத் தாக்கி, தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான்மீது சுமார் 40 நாடுகள் இணைந்து கூட்டு நடவடிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கும், உலகப் பொருளாதாரத்தை ஈரான் "பயணக் கைதியாக" வைத்திருப்பதைத் தடுப்பதற்கும் சுமார் 40 நாடுகள் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தின. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த நீரிணையைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் பொறுப்பு என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யுவெட் கூப்பர் தலைமையில் இந்த (Virtual) கூட்டம் நடைபெற்றது.
ஈரானின் "பொறுப்பற்ற" செயலால் உலகெங்கிலும் உள்ள வீடுகளும் வணிகங்களும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட யுவெட் கூப்பர், சர்வதேச கப்பல் பாதையை ஈரான் முடக்கியுள்ளதைச் சாடினார். ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்துவதற்கு ஈரான் எவ்வித கட்டணத்தையும் விதிக்கக்கூடாது என்றும், அனைத்து நாடுகளும் அதை சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது..
ஈரானிய எண்ணெய், பிரென்ட் கச்சா எண்ணெயை விட அதிக விலை!
ஈரானிய எண்ணெய், மே 2022-க்குப் பிறகு முதன்முறையாக, உலகளாவிய (Brent crude) பிரென்ட் கச்சா எண்ணெயை விட அதிக விலையில் வர்த்தகமாகிறது.
இதன் மூலம், நீண்ட காலமாக அது சந்தித்து வந்த, பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்ட கடுமையான தள்ளுபடிகள் தலைகீழாக மாறியுள்ளதாக ஈரான் சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம்!
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இத்தகைய தாக்குதல்கள் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பாலங்களை அழிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்களையும் நிர்மூலமாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி தனது 'ட்ரூத்' (Truth Social) சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டிருந்த கருத்திற்குப் பதிலடியாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "பாலங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளை இலக்காகக் கொள்வது எதிரியின் தோல்வியையும் தார்மீகச் சரிவையுமே காட்டுகிறது. சேதமடைந்த எந்தவொரு உட்கட்டமைப்பையும் ஈரான் மீண்டும் கட்டியெழுப்பும்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் தலைநகரில் பொது போக்குவரத்தை இலவசமாக வழங்கும் முடிவு!
பாகிஸ்தானில் எரிபொருட்களின் விலைகள் நேற்று மீண்டும் அதிகரிகரிக்கப்பட்ட நிலையில் தலைநகரில் பொது போக்குவரத்தை இலவசமாக வழங்கும் முடிவை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பொதுமக்களுக்கும் அடுத்த 30 நாட்களுக்கு பொது போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமுலுக்கு வரும்.
இந்த பொதுநல திட்டத்திற்காக ரூ. 350 மில்லியன் செலவை உள்துறை அமைச்சகம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர்
அமெரிக்க இராணுவத் தலைமை திடீர் மாற்றம்! பெரும் பரபரப்பு!!
ஈரான் உடனான போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவத்தின் உயர்மட்ட தளபதிகள் மூவரை பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணங்கள் எதனையும் ட்ரம்ப் நிர்வாகம் வெளியிடவில்லை.
மறுபுறம், 82-வது வான்வழிப் பிரிவின் பாராட்ரூப்பர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கடற்படையினர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரைந்து வரும் நிலையில், இந்தத் தலைமை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஈரானுக்கு எதிராக தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்குவது குறித்த கேள்விகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை நேரடியான பதிலைத் தவிர்க்கும் அதே வேளையில், ராணுவத் தலைமையின் இந்த திடீர் மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


