இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு.
.
இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையருகில் இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடரை அருட்தந்தை நவரட்ணம் அடிகளார் ஏற்றி, மாலை அணிவித்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். அவரை தொடர்ந்து, மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் 15ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழின படுகொலை இடம்பெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகியும் எதுவுமே மாறவில்லை.
இனப்படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகள் ஆனபோதும் எந்த மாற்றமும் நிகழவில்லை. பல்வேறு விதமான ஆணைக்குழுக்கள் அனைத்தும் பயனற்றுப் போனது. தமிழ் அரசியல்வாதிகளும் ஒழுங்குமுறையான திட்டமிட்ட தொடர் நடவடிக்கை எதையும் இனப்படுகொலை விவகாரத்தையும் முன்னோக்கி நகர்த்தவில்லை. அரசாங்கத்தால் மனித உரிமைமீறல்கள், ஒடுக்குமுறை, தனிமனித பேச்சு சுதந்திர அடக்குமுறை, பயங்கரவாத விசாரணைகள், அச்சுறுத்தல்கள், சிவில் செயற்பாட்டில் இராணுவ தலையீடு, பௌத்த ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியம், அரசியல் வேற்றுமைகள், மாற்றுக் கருத்துக்களை முடக்குதல், சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தல் என்பன தொடர்கிறது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, தொடர்ந்து வலியையே ஏற்படுத்தி வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் அர்த்தம் இல்லாத நடைமுறைச் சாத்தியமற்ற தீர்மானங்களை காலத்துக்கு காலம் எடுத்ததே தவிர, அதனால் பாதிக்கப்பட்ட தரப்புக்கு எந்த மாறுதலும் நிகழவில்லை. வெறும் காகிதங்களுடன் முடங்கிப்போனது.
மனித உரிமை ஆர்வலர்கள் என உலகின் பல பாகங்களிலும் இருந்து இங்கு வந்து எம்மை வேடிக்கை பார்த்தனரே தவிர நீதியை நிலைநாட்டவில்லை.
உலகில் ‘கனவான்கள்’ என வேடம் தரித்த எல்லோரும் சேர்ந்தே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றினார்கள். அவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த உலகம் வலியோனுக்கு நீதியையும் அறத்தையும் நியம நியதிகளுக்குள் ஒருபோதும் நிலைநாட்டியதாக எங்கும் வரலாறு இல்லை. எல்லாம் நலன் சார்ந்த நிகழ்தகவுகளே. அநீதியை விதைத்தவனிடம் நீதியின் நிர்ணயத்தை எதிர்பார்க்க முடியுமா? இலங்கை அரசு மட்டுமல்ல, சர்வதேசமும் எம்மை தொடர்ந்து ஏமாற்றுகிறது, ஏமாற்றியது. இனப்படுகொலையின் பங்குதாரராகியது.
நீதி போதிக்கும் சம தர்மம், மனித உரிமை, வாழ்வியல் உரிமை என உச்சரிக்கும் அநீதிக்கு துணை போகும் நீதி இல்லா நாதியற்ற போலி கனவான்களே, இனியாவது உங்கள் ஏமாற்று வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள்.
இந்த உலகம் இனியும் உங்களை நம்பத் தயாரில்லை. 15 ஆண்டுகளில் உங்கள் ஏமாற்று வித்தைகளை எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்புகள் நன்கு உணர்ந்துவிட்டன.
ஆகவே, எமக்குள் நாம் பேதங்களை கடந்து இனத்துவ, மொழித்துவ, வாழ்வியல், சுயநிர்ணய உரித்துக்களை பெற ஒருமித்து ஒருங்கிணைவதே ஒரே வழி.
அதுதான் எமக்கான நீதியை நாமே பெற்றுக்கொள்வதற்கான வழியும் கூட. 15 ஆண்டுகள் வெறுமையாக பயனின்றி கடந்துவிட்டது என்பதே கசப்பான உண்மை. இதற்கு வல்லான்மையற்ற தமிழ் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். ஆகவே, தமிழர் ஒரே தேசமாக திரள்வோம். அதுவே நமக்கான இன்றைய தேவை. இல்லையேல் முள்ளிவாய்க்காலில் மரணித்த ஆன்மாக்கள் நம்மை ஒருபோதும் மன்னிக்காது.
அது நிகழாத வரை சிங்கள தேசம் நம்மை பிரித்தாளும் வேலையே தொடர்ந்து செய்யும். ஆகவே, விழித்துக்கொள்ள வேண்டியது நாம் தான் என்றுள்ளது.