புதிய சபாநாயகராக டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு
.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்மொழிய, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.
பிரதி சபாநாயகர், டொக்டர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடவுள்ள இன்றைய அமர்வின் முதல் அங்கமாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
அதற்கமைய பொதுத்தேர்தல் நிறைவுபெற்று நீண்டதொரு இடைவெளியின் பின்னர் பெயரிடப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மனோ கணேசன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முத்து மொஹம்மட் மற்றும் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க ஆகியோர் பிரதான எதிர்க்கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் இரண்டாவது தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவும் இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
இதனையடுத்து முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர சபையில் சமர்ப்பிக்கவுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்தின் பிரகாரமும் அரசியலமைப்பிற்கு அமையவும் நிலையியல் கட்டளைகளுக்கு அமையவும் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
புதிய சபாநாயகர் தெரிவின் பின்னர் காலை 11 மணிக்கு பிரதான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கான காகிதத்தாள்களுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்பின்னர் மாலை 3 முதல் மாலை 6 மணி வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பிரேரணைக்கு அமைய இந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.